வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்! - அப்படியென்ன கேட்டிருப்பார்? | School teacher asks for a 1,000 saplings as dowry

வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:49 (25/06/2018)

வரதட்சணை கேட்ட ஆசிரியருக்குக் குவியும் பாராட்டுகள்! - அப்படியென்ன கேட்டிருப்பார்?

ஒடிசாவில், பள்ளி ஆசிரியர் ஒருவர் வரதட்சணை கேட்டதற்காக அனைவராலும் பாராட்டப்பட்டுவருகிறார். நம்ப முடியவில்லை அல்லவா? அவர் வரதட்சணையாகக் கேட்டது பணம், பொருளை அல்ல... மரக்கன்றுகளை!

ஆசிரியர்
 

ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்தில் உள்ள பாலபத்ரபூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர், சரோஜ் காந்த் பிஸ்வால். இவர், அதே கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவருக்கும் ரேஷ்மி ரேகா என்ற ஆசிரியைக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது ரேஷ்மியின் பெற்றோர்களிடம் சரோஜ், `எனக்கு வரதட்சணையாக 1,000 மரக்கன்றுகள் வேண்டும். என் திருமணத்தின் அடையாளமாக என் கிராமத்தில் அவற்றை நட்டுவைக்கிறேன்’ என்றார். அதைக்கேட்ட பெண் வீட்டாருக்கு இன்பம் கலந்த அதிர்ச்சி. அதே சமயம், மணமகன் தரப்பில் பலத்த எதிர்ப்பு. சரோஜ் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.

ஆசிரியர்
 

ஜூன் 22-ம் தேதி சரோஜ் - ரேஷ்மியின் திருமணம் எந்தவித ஆடம்பர செலவுகளும் இன்றி எளிமையாக நடந்தது. மாப்பிள்ளை கேட்ட வரதட்சணையை லாரியில் கொண்டுவந்து இறக்கினர் பெண் வீட்டார். திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

மரங்கள்

 

`எனக்கு வரதட்சணை வாங்குவது பிடிக்காது. மரங்களின் முக்கியத்துவம் பற்றி என் கிராம மக்களுக்கு எடுத்துரைக்கவே என் மாமனார் வீட்டில் சீதனமாக மரக்கன்றுகளைத் தாருங்கள் என்றேன்’ என்று கூறும் சரோஜுக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க