`வறட்சி மாவட்டமாக அறிவியுங்கள்!’ - ராமநாதபுரத்தில் விவசாயிகள் நடைப்பயணம் | Farmers rally in Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:19:15 (25/06/2018)

`வறட்சி மாவட்டமாக அறிவியுங்கள்!’ - ராமநாதபுரத்தில் விவசாயிகள் நடைப்பயணம்

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ராமநாதபுரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் நடைபயணம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவிவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் மழையின் அளவு குறைந்து கொண்டே இருப்பதால் குடிநீருக்குக்கூட அல்லல்படும் நிலை உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் மழையை நம்பி பயிரிடப்பட்ட நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர் வகைகளும் வறட்சியால் விளையாமல்போனது. இதனால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் விவசாயச் சங்கத்தினர் மாவட்டம் தழுவிய நடைப்பயணம் மேற்கொண்டனர்.

ராமநாதபுரம் நகரின் நுழைவுப் பகுதிகளான மதுரை-பரமக்குடி புறவழிச்சாலை, ஆர்.எஸ்.மடை சோதனைச்சாவடி, குயவன்குடி, பேராவூர் புறவழிச்சாலை ஆகிய 4 பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நடைப்பயணமாக வந்தனர். மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த நடைப்பயணத்தில் மாநிலப் பொருளாளர் பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் முத்துராமு, மயில்வாகனன், முருகேசன், கல்யாணசுந்தரம் உள்ளிட்ட  நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். 
நடைப்பயணத்தின் முடிவில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் நடராஜனிடம் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் அளித்தனர்.