வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (25/06/2018)

கடைசி தொடர்பு:16:35 (25/06/2018)

`பருவமழை வந்தாலும் நீரைச் சேமிக்க முடியாது!’ - கவலையில் டெல்டா விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் பாயும் காவிரியின் முக்கிய கிளை ஆறான வெண்ணாற்றுப் பாசனக் கால்வாய்கள் சரியாக தூர் வாரப்படாததால், கால்வாய் முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து முள்காடாகக் காட்சியளிக்கிறது.

தூர்வாரப்படாத கால்வாய்- கவலையில் டெல்டா விவசாயிகள்

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றின் பாசனக் கால்வாய்களை அரசு தூர் வாரித் தர வேண்டும் என விவசாயிகள் வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் 40 சதவிகித அரிசித் தேவையை தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதிகள்தான் பூர்த்திசெய்துவந்தன. முப்போக விவசாயம் நடைபெற்றுவந்த இம்மாவட்டங்களில், தற்போது ஒருபோக விவசாயம் செய்யக்கூட நீர் இல்லாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் சரியாக நீர் வராததாலும் பருவநிலை மாறுபாட்டாலும், கடந்த 7 வருடங்களாக குருவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், இந்த வருடமும் இதேநிலை தொடர்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

''கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் மழையால், தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது. இந்த நீரை நம்பி சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகிவரும் நிலையில், காவிரியின் கிளை ஆறுகள் தூர் வாரப்படாமல் இருக்கின்றன. இதனால், அணையிலிருந்து வரும் தண்ணீர், முழுமையாக விவசாய நிலங்களை வந்தடையாது'' என்கின்றனர். ''இன்னும் சில மாதங்களில் பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அதன்மூலம் கிடைக்கும் நீரையாவது சேமித்துவைத்து விவசாயம் செய்யலாம் என்றால் ஆறுகள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகள் சரியாக தூர் வாரப்படாமல் இருக்கின்றன. எனவே, இந்த விவகாரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்து, விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்'' என விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.