வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (25/06/2018)

கடைசி தொடர்பு:17:26 (25/06/2018)

கட்டுக்கடங்காத மணல் கொள்ளை... பதட்டத்தில் காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை!

கட்டுக்கடங்காத மணல் கொள்ளை... பதட்டத்தில் காஷ்மீர் டு கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை!

திருவிளையாடல் படத்தில் சிவபெருமானிடம் தருமி கேட்கும் பாணியில், `பிரிக்க முடியாதது எது?' என்று கேட்டால், தயங்காமல் `கரூரும், மணல் கொள்ளையும்' என்று பதில் சொல்லலாம். தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான மணல் கொள்ளை, கரூர் மாவட்ட காவிரி ஆற்றில்தான் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் அமைத்து 20 அடி ஆழம்வரை ஆற்றில் களிமண் தெரியும் அளவுக்கு மணலைச் சுரண்டி அள்ளியதால், காவிரி ஆறு பாலைவனமாகிக்கொண்டிருக்கிறது.

ஆற்றங்கரையோரங்களில் இருக்கும் தென்னை, பனை மரங்களெல்லாம் பட்டுப்போய், காவிரி கெட்டுப் போனதைப் பறைச்சாற்றிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ``அளவுக்கதிகமான மணல் கொள்ளையால் கரூர் மாவட்டத்திலிருந்து நாமக்கல், திருச்சி மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்ட பல பாலங்களின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில் இருக்கிறது. குறிப்பாக, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பாலத்தின் தூண்கள், ஆற்றில் மணல் சுரண்டப்படுவதால் கடும் பலவீனத்துக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேலும் இந்தப் பகுதியில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்தத் தவறினால், இந்தப் பாலத்தின் கதி அதோகதிதான்" என்று எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 காவிரி ஆறு

கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை -7, கரூர் மாவட்டம் வழியாகச் செல்கிறது. காவிரி ஆற்றில் கரூர் மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையத்திலிருந்து, நாமக்கல் மாவட்ட எல்லையான வேலூர்வரை இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில்விஜயன் இரண்டு பாலங்கள் உள்ளன. பழைய பாலம் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1951-ம் ஆண்டில் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. அந்தப் பாலம் கனரக வாகனங்கள் போவதற்குத் தோதாக இல்லாமல் பழுதடைந்து விடவே, அதன் அருகிலேயே கடந்த 2008-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் புதிய பாலம் கட்டப்பட்டது. மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை என்பதால், புதிய பாலத்தை மிகவும் திடமானதாகவே அமைத்தனர். ஆனால், அந்தப் பாலத்தின் வீரியம் புரியாத மணல் மாஃபியாக்கள், பாலத்தின் அருகிலும் மணலை அள்ள, பழைய மற்றும் புதிய பாலங்களின் தூண்கள் பன்னிரண்டு அடிவரை வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. அந்தப் பாலங்களின் கீழே இருந்த மணல் சுத்தமாக அள்ளப்பட்டிருக்க, காவிரியில் வேகமாகத் தண்ணீர் வரும்போது, பாலத்தின் கீழே மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்தின் அஸ்திவாரம் காலாவதியாகும் அபாய நிலை உள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

காவிரி ஆறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் சமூக ஆர்வலர் விஜயன் நம்மிடம் பேசியபோது, ``காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை. அதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, எல்லாக் கட்சிகளும் அவ்வபோது கூக்குரல் எழுப்புகின்றன. ஆனால், காவிரியில் கணக்கே இல்லாமல் மணலை அள்ளி, காவிரி ஆற்றைப் பாலைவனமாக்கி, கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீரை 400 அடிக்குக் கீழே கொண்டுபோக வைத்தததும் இதே அரசியல் கட்சிகளைச் சேர்ந்த புள்ளிகள்தாம். கரூரில் தி.மு.க, அ.தி.மு.க. எனக் கட்சி பாகுபாடில்லாமல் எல்லாக் கட்சியினரும், காவிரியை மொட்டையடித்து விட்டார்கள். அதன் விளைவு, காவிரிக் கரையோரங்களில் உள்ள மரங்கள் பட்டுப்போய் விட்டன. மேலும் கரையோரப் பகுதிகளிலேயே குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் இங்குள்ள கடம்பன்குறிச்சியில் மட்டும் மணல் குவாரி நடத்த அரசு அனுமதி கொடுத்தது. 

ஆனால், ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிக்கு வேண்டிய நபர்கள், மேட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, கட்டளை, நெரூர், மாயனூர், சிந்தலவாய், சிந்தலவாடி, மகாதானபுரம், லாலாபேட்டை என 50 கிலோ மீட்டர் தூரத்துக்குத் திருச்சி மாவட்ட எல்லைவரை, விதிகளை மீறி காவிரி ஆற்றில் அதிகளவு மணலை அள்ளி, ஆற்றைச் சாகடித்து விட்டார்கள். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்துக்கு மேற்கேயும் கோம்புப்பாளையத்தில் மணலை அள்ளினார்கள். இதனால், காவிரி ஆற்றில் உள்ள பாலங்கள் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றன. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு பத்து வருடங்கள்கூட ஆகவில்லை. ஆனால், அந்தப் பாலத்தின் கீழே மணலை அள்ளி, கிட்டத்தட்ட பாலத்தின் அஸ்திவாரமே தெரியும் அளவிற்குக் கொண்டு வந்துவிட்டார்கள். இதனால் பாலத்துக்கே பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது" என்றார்.

மணல் கொள்ளை

சுப்பிரமணியன்காவிரிப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப்பிரமணியன், ``இந்தப் பாலம் மட்டுமல்ல, வாங்கல் பாலத்தின் ஓரிரு தூண்களும் அஸ்திவாரம் அரிக்கப்பட்டு, அந்தரத்தில் தொங்கும் நிலை உருவாகியுள்ளது. அந்தப் பாலம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி மாவட்டத்துக்குச் செல்லும் பாலத்தின் அடியிலும் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்ததால், பாலத்தின் தூண்கள் சேதமடையும் நிலையில் உள்ளன. மாயனூர் தடுப்பணைக்கு அருகிலும் அதிகளவில் மண் அள்ளப்பட்டுள்ளதால், அணையின் கட்டமைப்பு சிதிலமடைய வாய்ப்புள்ளது. இதேபோல்தான், குளித்தலை டு  திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள முசிறி வரை போடப்பட்ட பாலமும் மணல் கொள்ளையால் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அபரிதமாக மேற்கொள்ளப்படும் இந்த மணல் கொள்ளையை கரூர், நாமக்கல், திருச்சி மாவட்ட முக்கியப் புள்ளிகளின் ஆதரவாளர்களே முன்னின்று செய்கிறார்கள். மாவட்ட நிர்வாகங்கள், இந்த மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறி விட்டன.

இனியும் காவிரி ஆற்றில் மணல் கொள்ளைக்கு அனுமதித்தால், விரைவில் அந்தப் பகுதியில் உள்ள பாலங்களுக்குப் பால் ஊற்றும் அபாயம் ஏற்படும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், டெல்டாவில் மீத்தேன், சேலத்தில் எட்டுவழி பசுமைச்சாலை, கரூரில் மணல் கொள்ளை என தொடர்ந்து இயற்கைக்கு, மக்கள் வாழ்வாதாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடந்து கொண்டே இருந்தால் மக்கள் என்னதான் செய்ய முடியும்? மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதற்குப் பதிலாக ஒரு குண்டைப் போட்டு அழிச்சுட்டு, அப்புறம் இயற்கையை ஆட்சியாளர்கள் சூறையாடட்டும்" என்று எச்சரித்து முடித்தார்.

அன்பழகன்கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை குறித்து கருத்துக் கேட்க, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனைத் தொடர்பு கொண்டோம். ``நீங்கள் சொல்வது போல் எல்லாம் மணல் கொள்ளை நடப்பதில்லை. மாவட்டத்தில் மணல் கொள்ளையை இரும்புக்கரத்தால் அடக்கிக்கொண்டுதான் உள்ளோம். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள பாலம் அறிவியல்ரீதியாக எதையும் தாங்கும் அளவுக்குப் போடப்பட்டுள்ளது. அங்கு மணல் குறைந்துள்ளதால், பாலம் பழுதாகி விடும் என்று கூறுவது தவறான புரிதல். அங்கு மணல் கொள்ளையை அறவே தடுத்துவிட்டோம். மற்ற பாலங்கள் மற்றும் அணைகளின் நிலையும் ஆபத்து ஏற்படும் அளவுக்கெல்லாம் இல்லை. மாவட்ட நிர்வாகம் பாலங்கள், அணைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் ஒரு சதவிகிதம்கூட, மணல் கொள்ளை நடக்காமல் தடுக்கப்படும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்