'அதிகக் கட்டணம் செலுத்தச் சொல்கிறார்கள்'- இலவச கல்வித்திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள் குமுறல்

அரசு பரிந்துரை செய்ததைவிட அதிக அளவு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என தனியார் பள்ளி முதல்வர் வலியுறுத்துவதாகக் கூறி, மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

மாணவர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள எஸ்.டி.ஏ என்ற தனியார் பள்ளியில், ஆர்.டி.ஏ என்று சொல்லப்படும் அரசின் இலவச கல்வித் திட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவரும் நிலையில், இந்தப் பள்ளியின் முதல்வர் ஜெயக்குமார், அரசு நிர்ணயம்செய்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும், அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்கவைப்பதாகவும், புத்தகங்கள் வழங்க மறுப்பதாகவும் கூறி, மாணவ மாணவிகளுடன் பெற்றோர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோஷங்களை எழுப்பியவாறு மனு அளிக்க வந்தனர்.

அவர்களைத் தடுத்துநிறுத்திய காவல்துறையினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அழைத்துச்சென்றனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், "கடந்த திங்கள் அன்று,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தபால்மூலம் மனு அளித்தோம். ஆனாலும், எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, தற்போது நேரடியாக ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். எங்களுக்கு முறையான தீர்வு கிடைக்க வேண்டும். எப்போதும் இல்லாத பிரச்னைகள் தற்போது புதிதாக வந்துள்ள பள்ளி முதல்வர் ஜெயக்குமாரால் பெறும் சிரமத்தையும் மன உளைச்சலையும் அடைகிறோம். எனவே, இதற்கு உடனடித் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையென்றால், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்'' என்றனர் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!