நேரடி விவாதத்துக்கு நான் தயார்; நீங்கள் தயாரா?- அன்புமணிக்கு சவால்விடும் தமிழிசை

'அன்புமணியுடன் நேரடியாக விவாதம் நடத்த நான் தயார், அவர் தயாரா?' என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சவால் விடுத்துள்ளார்.

 

தமிழிசை

 


சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள்குறித்த உயர்மட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், `ஜூலை 9-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவருகிறோம். மத்தியில் காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் தி.மு.க-வும் இருந்தபோது, தமிழகத்துக்கு எந்தத் திட்டமும் வரவில்லை. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் எய்ம்ஸ், காவிரி மேலாண்மை வாரியம், 8 வழிச்சாலை உள்ளிட்ட பெரிய திட்டங்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மத்திய அரசு, தமிழகத்துக்கு தொடர்ந்து பல நல்ல திட்டங்களைத் தந்து வருகிறது. மதுரை தோப்பூரில் அமைய உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவார்.

ஆளுநரின் பயணங்களை ஸ்டாலின் விமர்சிக்கிறார். ஆளுநர், சட்டப்படிதான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆளுநர் தங்களை மிரட்டுவதாக ஸ்டாலின் கூறுவது தவறானது. திருவள்ளூர், திருப்பூரில் நக்சலைட்டுகள் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சூழலில், அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயக்குநர் கௌதமன், பியூஸ்மனுஷ், மன்சூர் அலிகான் இவர்கள் மக்கள் ஆதரவாளர்களா? சேலத்தையும் தூத்துக்குடியாக மாற்ற வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையில், மக்களுக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார்கள். இவர்களைக் கைதுசெய்ததை வரவேற்கிறேன். போராட்டங்கள் மக்களின் உயிரைப் பலிவாங்கக் கூடியதாக மாறக் கூடாது.

அன்புமணி

நான் யாரையும் மரியாதை குறைவாகப் பேசியதில்லை. அன்புமணி தான் உலகிலேயே புத்திசாலி போல பதிவுகளை இட்டு வருகிறார். அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்குக் கொண்டுவரவில்லை. கருத்துக்கு கருத்துதான் பதிலாகுமே தவிர; என் தகுதியை விமர்சிப்பது எப்படி பதிலாகும்? அன்புமணியுடன் நேரடி  விவாதத்துக்கு நான் தயார்; அவர் தயாரா? அரசியலில் ஆண் பெண் வேறுபாடில்லை. நான் உயிருக்குப் பயந்தவள் இல்லை. செங்கல்பட்டு பொதுக்கூட்டத்துக்கு வந்தவர்களின் உயிருக்காகத்தான் பயந்தேன்'' என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!