வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:00 (25/06/2018)

சாலையில் கிடந்த பழங்கால நடராசர் சிலை! காவலரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

சென்னையில், சாலையில் கிடந்த பழங்காலச் சிலையை காவல்துறையிடம் ஆட்டோ ஒட்டுநர் ஒப்படைத்ததையடுத்து, சிலைகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

ஆட்டோ டிரைவர்


சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பின்புறத்தில், ஆட்டோ நிறுத்தம் அருகே மர்ம பை ஒன்று கிடந்துள்ளது. அதே பகுதியில் ஆட்டோ ஒட்டிவருபவர், செல்வம். ஆட்டோ நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி கிடந்த மர்மப் பையைக் கவனித்த ஆட்டோ செல்வம், அதைப் பிரித்துப் பார்த்துபோது, அதில் பழைமையான நடராசர் சிலை ஒன்று இருந்துள்ளது. உடனே அவர், எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் சிலையை ஒப்படைத்தார்.  அதைப் பெற்றுக்கொண்ட போலீஸார், ஆட்டோ டிரைவர் செல்வத்தின் செயலைப் பாராட்டி 2,000 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கிப் பாராட்டும் தெரிவித்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் செல்வம் கொடுத்த புகாரின் அடிப்படையில், எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நேரில் வந்த சிலை கடத்தல் பிரிவு ஐஜி., பொன்மாணிக்கவேல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ஆகியோர், சிலையை ஆய்வுசெய்தனர். சிலை, கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். பொதுவழியில் கிடந்த நடராசர் சிலைகுறித்து விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீஸார், சிலையைக் கொண்டுவந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக இந்தச் சிலை இங்கு கொண்டுவரப்பட்டது... போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச்  சிலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைப்பட்டது.