வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:15 (25/06/2018)

`சாதிச் சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை!’- ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர்கள்

'சாதிச் சான்றிதழ் இல்லை என்றால் பள்ளிக்கு வராதீங்க' என்று கூறி, மாணவர்களை தலைமை ஆசிரியர் புறக்கணிப்பதாக மதுரை சோழவந்தான் பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சாதிச் சான்று வழங்கக் கோரி மனு

மூன்று தலைமுறையாக வழங்கப்பட்டுவந்த ‘இந்து - மலைவேடன்” என்னும் பழங்குடியின மக்களுக்கான சான்றிதழ், தற்போது அவர்களுக்கு அரசு வழங்காமல் இழுத்தடிப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாமலும், பிற அரசு சலுகைகளைப் பெறமுடியாமலும் தவிப்பதாக, மதுரை வாடிப்பட்டியை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தைச் சார்ந்த காமு , ராமலிங்கம் ,ராமாயி , ராஜி  உள்ளிட்ட அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் சீருடையில் வந்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் நம்மிடம் கூறுகையில், “ நாங்கள் இந்து மலைவேடன் இனத்தைச் சார்ந்த பழங்குடியின மக்கள். எங்கள் அப்பா, தாத்தா, அவர்களின் முன்னோர்கள் அனைவருக்கும் எஸ்.டி பிரிவிலேயே சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், எங்கள் இனத்தைச் சார்ந்த தற்போதைய தலைமுறையில் சான்றிதழ்களை அரசு வழங்கவில்லை. அதனால்,பலரும் பள்ளிக்குச் செல்லாமல் கூலித்தொழில் செய்துவருகின்றனர். பள்ளிக்குச் சென்றால், `சாதிச் சான்றிதழுடன் பள்ளிக்கு வாங்க’ என்று தலைமை ஆசிரியர் கூறுகிறார். இதனால், நாங்கள் பள்ளிக்குச் செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. எங்களுக்கு ஏன் அரசு சான்றிதழ்கள் வழங்கவில்லை என்றுகூடத் தெரியாது. எனவே, அரசு எங்கள்மீது அக்கறைகொண்டு, சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்றனர்.