நிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி! | Madurai hc gives permission to CBCID police in Nirmala devi case

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (25/06/2018)

கடைசி தொடர்பு:10:08 (26/06/2018)

நிர்மலா தேவியை சென்னை அழைத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி!

பேராசிரியை நிர்மலா தேவியை குரல் மாதிரி பரிசோதனை செய்ய ஜூன் 27, 28, 29 மூன்று நாள்கள் சென்னை அழைத்துச்செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.

நிர்மலா தேவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளைப் பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு அழைக்கும் விதமாகத் தொலைபேசியில் பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியை நிர்மலா தேவியைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி சோதனை செய்ய மதுரையில் உரிய வசதி இல்லாததால், அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று சென்னையில் குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸார் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அப்போது கீழமை நீதிமன்றம் மதுரை மத்திய சிறையில் குரல் மாதிரி பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது மதுரையில் உரிய வசதிகள் இல்லாததால் நிர்மலா தேவியைச் சென்னை அழைத்துச் சென்று  குரல் மாதிரி பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து நிர்மலா தேவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. 

இந்த மனு இன்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவி தரப்பில் சென்னை அழைத்துச் செல்ல எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காததால், குரல் மாதிரி பரிசோதனை செய்ய ஜூன் 27, 28, 29 மூன்று நாள்கள் சென்னை அழைத்துச் செல்ல சி.பி.சி.ஐ.டி-க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.