வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (25/06/2018)

கடைசி தொடர்பு:18:50 (25/06/2018)

சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதல்!

ட்விட்டரில் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து, சென்னையில் பா.ம.க - பா.ஜ.க தொண்டர்கள் மோதிக்கொண்டனர்.

தமிழிசை - அன்புமணி

எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் ட்விட்டரில் மாறி மாறி கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து ஒரு கட்டத்துக்கு மேல் இருவருக்குமிடையே கருத்து மோதலாக வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழிசை சௌந்தரராஜன் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிடப் பேரணியாகச் சென்றனர்.

பா.ம.க

இதையறிந்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டனர். கமலாலயத்தை முற்றுகையிட வரும் பா.ம.க தொண்டர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இந்த மோதலின்போது அரசுப் பேருந்துக் கண்ணாடி உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.