வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (25/06/2018)

கடைசி தொடர்பு:19:44 (25/06/2018)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100 வது நாள் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் சென்னையிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன் விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றம்

வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், இழப்பீடு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் வழக்குகளை சென்னைக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டார். வழக்குகள் அனைத்தும்  ஜூலை 2-ம் தேதி பட்டியலிட வேண்டும் என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 2-க்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.