வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/06/2018)

கடைசி தொடர்பு:11:17 (11/07/2018)

சேலத்தில் ராணுவ பீரங்கி! - தி.மு.க. கொதிக்க, செல்ஃபி எடுக்கிறார்கள் போலீஸார்

இந்திய-பாகிஸ்தான் போரில் பயன்படுத்தப்பட்ட ராணுவ பீரங்கி, சேலத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. ' டெல்லி ராணுவ முகாமில் வைக்கப்பட்ட இந்த பீரங்கியை பொதுமக்களின் பார்வைக்காகக் கொண்டு வந்திருக்கிறோம்' என்கின்றனர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.

பீரங்கி முன் செல்ஃபி

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவகத்துக்கு நேற்று இரவு கோவையிலிருந்து ராணுவ பீரங்கி ஒன்று கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து விளக்கிய அதிகாரிகள், `` 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தப் பீரங்கி பயன்படுத்தப்பட்டது. 41.5 டன் எடை உள்ள டி.55 விஜயேந்திரா என்ற ரக பீரங்கி. இது டெல்லி ராணுவ முகாமில் வைக்கப்பட்டது. கடந்து சில நாள்களுக்கு முன்பு கோவை ராணுவக் கண்காட்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போது சேலம் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய வீரபாண்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.கே.செல்வம், '' பசுமை வழிச்சாலையை எதிர்த்து, அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்திருக்கும் வேளையில், இந்த பீரங்கிதான் இப்போது சேலத்துக்கு அவசியமா? பொதுமக்கள் போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் முதலில் பதில் சொல்லட்டும்!" என்றார். 

" காட்சிக்காக வைக்கப்படும் பீரங்கியை வைத்து ஏன் அரசியல் செய்ய வேண்டும்?  சென்னையில் நடந்த ராணுவக் கண்காட்சியில் அனைத்து வகையான போர் தளவாடங்களும் வைக்கப்பட்டிருந்தன. அதைப்போலத்தான் நமது ராணுவத்தின் செயல்பாடுகளைப் பற்றி மக்களிடம் எடுத்துரைக்க இதுபோன்ற பொருட்களை காட்சிப்படுத்துகிறோம்" என்கின்றனர் அதிகாரிகள்.