வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:28 (26/07/2018)

சேலத்தில் விவசாயிகளின் கதறலுக்கும் கண்ணீருக்கும் இடையே நில அளவைப் பணி நிறைவு!

சேலம்

சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைக்கு சேலத்தில் 36.3 கி.மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நில அளவை கடந்த 18-ம் தேதி சேலம், தருமபுரி எல்லைப் பகுதியான மஞ்சவாடி கணவாய்ப் பகுதியில் தொடங்கியது. விவசாயிகளின் கதறலும் கண்ணீருக்குமிடையே இன்று (25.6.2018) சேலம் கஞ்சமலை அடிவாரப் பகுதியான அரியாரில் அளவைப் பணி நிறைவு பெற்றது.

இன்று காலை பூலாவரி புஞ்சைக்காடு பகுதியில் நில அளவை செய்யப்பட்டது. அப்போது சக்திவேல், செல்விக்குச் சொந்தமான தென்னந்தோப்பு, வீடு ஆகியவை பறிபோவதாகத் தேம்பி அழுதார் செல்வி. ``இப்பத்தான் இந்த வீட்டை பல லட்ச ரூபாய் செலவு செய்து பார்த்துப் பாத்துக் கட்டினோமே. 8 வழிச் சாலைக்கு எங்க காடு, வீடு எல்லாமே எடுத்துட்டுப் போறாங்களே. நாங்க 20 குடும்பத்துக்கு வேலை கொடுத்து வாழ வைத்தோம். யாருக்கும் கெடுதல் செய்யவில்லை.

சேலம்

எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை வந்தது. வீட்டை இடித்தால் என் கணவர் இறந்துபோயிடுவேன்னு சொல்றாரே? நான் என்ன செய்வேன். கெளரவமாக வாழ்ந்த எங்களை நடுரோட்டில் நிறுத்திட்டாங்களே’’ என்று தரையில் படுத்துக்கொண்டு அழுதார். நாங்க இந்த நிலத்தைக்கூட சேர்த்து எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுருங்கன்னு சொன்னால் கேட்க மாட்டேங்கிறாங்களே என்று கண்ணீர்விட்டார். அவர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கும்போதே வீட்டுக்கு முன் முட்டுக் கல் நடப்பட்டது. உடனே பாய்ந்துபோய் முட்டுக்கல்லைப் பிடுங்கி எறிந்தார் செல்வி.

அதையடுத்து முத்துலட்சுமி, மோகனசுந்தரம், மணிமேகலை ஆகியோர் கீழே உக்கார்ந்துகொண்டு ஒப்பாரி வைத்து அழுதார்கள். அப்போது முத்துலட்சுமி, ``இந்த ஒரு தென்னை மரத்தைக் காப்பாற்ற நாங்க எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம். நம் தோட்டத்துக் காய்களைச் சாப்பிடுபவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் வரக் கூடாது என்று நம்மாழ்வார் முறைப்படி இயற்கை விவசாயம் செய்து இந்த மரத்தையும் மண்ணையும் பாதுகாத்து வந்தோம். இப்பப் பறிச்சுட்டுப் போறாங்களே. முதல்வர் பெரும்பாலான விவசாயிகள் தாமாகவே முன் வந்து நிலங்களைத் தருகிறார்கள் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறாரே?. இதுதான் முதல்வருக்கு அழகா!. இந்த நில அளவை செய்யும் இடத்துக்கு வந்து பார்க்கக் கூடாதா?'' என்றார்.

முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சரின் உதவியாளர் ஆத்துக்காட்டு சேகருக்குச் சொந்தமான 70 சென்ட் நிலம் இந்தத் திட்டத்துக்காக அளவை செய்யப்படவிருந்தது. அவருடைய காட்டில் அளவை செய்ய கால் வைக்கும்போது, அதிகாரிகளைத் தடுத்து தாசில்தாரை வரச் சொன்னார். பின்னர், `எங்களுக்கு எந்த முன் அறிவிப்பும் செய்யாமல் எப்படி நிலம் எடுக்கலாம்?’ என்று சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தாசில்தார், ``செய்தித்தாள்களில் அறிவிப்பு கொடுத்தோம். தனிப்பட்ட முறையில் கருத்துக் கேட்புக்குப் பிறகு கொடுப்போம்'' என்றார். ஆனால், அவர் முட்டுக்கல் போடக் கூடாது என்று மறுத்ததை அடுத்து அடுத்த காட்டில் முட்டுக்கல் நட்டு அளவையைத் தொடர்ந்து ஒருவழியாக நில அளவைப் பணியை நிறைவு செய்துவிட்டார்கள்.