வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (25/06/2018)

கடைசி தொடர்பு:22:28 (25/06/2018)

`செல்போனில் பேசிக்கொண்டே இருந்தது பிடிக்கவில்லை!’ - மனைவியைக் கொன்ற சிறை வார்டன் வாக்குமூலம்

நெல்லையில் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சிறை வார்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மனைவி அதிகமாகச் செல்போனில் ஆண் நண்பர்களுடன் பேசியதால் கொலை செய்ததாகக் கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலம்மாள் கொலை- கணவன் வாக்குமூலம்

நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு. 28 வயதான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வேலம்மாள் என்பவருக்கும் இடையே கடந்த மே 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மணமாகி 25 நாள்களே ஆன நிலையில், நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு போலீஸில் சரண் அடைந்தார். அவர் தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், போலீஸ் விசாரணையின்போது பாலகுரு அளித்த வாக்குமூலத்தில், ``நான் மதுரை மத்திய சிறையில் வார்டனாகப் பணியாற்றி வந்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலமில்லாததால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தேன். அப்போது எனது ஊரைச் சேர்ந்த நர்ஸிங் மாணவியான வேலம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வோம். நாளடைவில் அதுவே காதலாக மலர்ந்தது. 

கடந்த மாதம் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போயிருந்தேன். அதைப் பார்த்துவிட்ட அவரின் உறவினர்கள் எங்களைப் பிடித்து திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். இந்தத் திருமணத்துக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. நானும் பத்திரிகை அச்சடித்து சிறப்பான வகையில் திருமணம் செய்ய நினைத்திருந்த நிலையில், வேலம்மாள் மற்றும் உறவினர்களால் இப்படி நடந்துவிட்டதே என வேதனைப்பட்டேன்.

கடந்த 10 நாளுக்கு முன்பு எனக்கு பாளையங்கோட்டை சிறைச்சாலைக்கு மாற்றல் கிடைத்தது. அதனால் இருவரும் தனிக்குடித்தனத்துக்கு ஏற்பாடு செய்து வந்தோம். ஆனால், வேலம்மாள் எப்போதும் செல்போனில் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்பார். நிறைய பேரிடமிருந்து மெசேஜும் வரும். அதை நான் கண்டித்தும் அவர் கேட்கவில்லை. அதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுத் தகராறு இருந்தது. ஆனாலும், சொல்வதைக் கேட்காமல் நிறைய ஆண் நண்பர்களுடன் அவர் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை.  

இந்த நிலையில் நான் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டு பைக்கில் கூட்டிச் சென்றேன். வழியிலேயே அரிவாளால் வெட்டினேன். தலையை மட்டும் துண்டித்து தனியாக வீசிவிட்டு உடலைத் தனியாகப் புதருக்குள் தள்ளிவிட்டு போலீஸில் சரணடைந்தேன். என்னோட மனைவி எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது’’ எனத் தெரிவித்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை வார்டன் பாலகுருவை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.