வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (25/06/2018)

கடைசி தொடர்பு:20:34 (25/06/2018)

பணியாளர்கள் பற்றாக்குறை.. மருந்து தட்டுப்பாடு.. கீழ்ப்பாக்கம் மருத்துவமனை பின்னணி!

கீழ்ப்பககம் அரசு மனநலக் காப்பகம்

கீழ்ப்பாக்கம் என்றாலே மேலும்கீழுமாகப் பார்ப்பவர்களுக்கு, அங்கு நூறாண்டுகளுக்கும் மேல் செயல்பட்டுவரும் அரசு மனநலக் காப்பகத்தின் இன்றைய நிலை தெரியுமா என்பது கேள்விக்குறிதான்!

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் இரண்டு பெரிய அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஒன்று, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை; மற்றது, வடக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநலக் காப்பகம் எனப்படும் மனநல மருத்துவமனை! பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அரசு மனநலக் காப்பகமானது படிப்படியாக உருக்குறைப்பு செய்யப்பட்டுவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர், மனநலக் குறைபாடுடையவர்களின் உறவினர்கள்! 

முக்கியக் காரணம், மருத்துவமனைக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படவேண்டிய தேவை இருந்தும், பல்வேறு காரணங்களைக் கூறி, புறநோயாளிகளாகவே சிகிச்சை அளித்து அனுப்பிவிடுகின்றனர்; சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே மனநோயாளிகளை மிகுந்த மனிதநேயத்தோடு அணுகி, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்துவந்த இந்த மருத்துவமனையில், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று நோயாளிகளின் குடும்பத்தினரும் உறவினர்களும் வருத்தத்தைக் கொட்டுகிறார்கள். 

உள்நோயாளிகளுக்கென தனியாகவும் புறநோயாளிகளுக்கென தனியாகவும் வளாகங்கள் உள்ளன. இரண்டும் சேர்ந்து அரசு மனநல மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. இதில் பல மாதங்களாக மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது. முன்னர், தரப்பட்ட மருந்துகளின் அளவில் பாதியோ கால் பகுதியோதான் இப்போது தரப்படுகின்றன; இதனால், நோயாளியுடன் வருபவர்கள் இதற்காக மேலும் ஒரு நாள் இங்கு வரவேண்டியுள்ளது. பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படுகிறது. குறைந்த வருவாய் பெறுபவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

நோயாளிகள்சார்ந்து பல பிரச்னைகள் நீடித்துவரும் நிலையில், பணியாளர்களுக்கும் பல பிரச்னைகள் இருந்துவருகின்றன. இது தொடர்பாக அவர்கள் தரப்பில் பல முறை எடுத்துச்சொல்லியும் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பணியாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு! இந்த மருத்துவமனையின் இயக்குநர் பொறுப்புக்கு வருபவர்கள் விரைவில் ஓய்வுபெறக்கூடியவர்களாக இருப்பதும் தற்காலிகமாகப் பொறுப்புவகிப்பதும் பெரும் குறையாக இருக்கிறது. இந்நிலையில், இன்று காலை மனநலக் காப்பகத்தின் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வடசென்னை மாவட்டத் தலைவர் எம். அந்தோணிசாமி, கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆதிமூலம், தமிழழகன், வாசுதேவன் உட்பட பலரும் பேசினர். 

கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகம்

கூட்டத்தில் பேசிய தலைவர்கள், “நோயாளிகளை கவனிக்கக்கூடிய உடனாளர்கள்(attendants) பணியிடங்கள் பாதிக்குப் பாதி காலியாகவே உள்ளன. 202 பேர் இருக்கவேண்டிய ஆண் உடனாளர்களின் எண்ணிக்கை, 102ஆக மட்டுமே உள்ளது. பெண் உடனாளர்களின் எண்ணிக்கை 79-க்குப் பதிலாக 34-ஆக உள்ளது. இருக்கவேண்டிய ஆண் துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை 91; காலியிடங்கள் 34! பெண் துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை 44; ஆனால் 17 இடங்கள் காலியாக உள்ளன. இதைப்போல சமையல் பணியாளர்கள், சலவைப் பணியாளர்களின் எண்ணிக்கையும் நான்கில் ஒரு பங்கு காலியாக இருக்கிறது.” என்று வலியுறுத்தினர். 

மேலும், “அரசு மனநலக் காப்பக நோயாளிகளுக்கென ஏழு சவரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதுவும் முந்தைய கால நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது. இப்போது இரண்டே பேர்தான் பணியாற்றுகின்றனர். ஐந்து இடங்கள் காலியாக இருக்கின்றன. இருக்கும் பணியாளர்கள் எத்தனை பேருக்கு பணியாற்றமுடியும்? அவசர ஊர்திப் பணியாளர் இடங்கள் மூன்று என இருந்தாலும் ஒரே ஒருவர்தான் அந்தப் பணியில் இருக்கிறார். இரண்டு இடங்கள் காலியாக இருக்கின்றன. 12 ஆண் காவலர்கள் பணியிடங்களில் ஏழு இடங்களும் எட்டு பெண் காவலர் இடங்களில் இரு இடங்களும் காலியாகவே இருக்கின்றன. இந்தப் பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்பவேண்டும்” என்றும் தலைவர்கள் குறிப்பிட்டனர். 


டிரெண்டிங் @ விகடன்