ராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்! | AK 47 bullets recovered from land in Rameshwaram

வெளியிடப்பட்ட நேரம்: 21:13 (25/06/2018)

கடைசி தொடர்பு:21:22 (25/06/2018)

ராமேஸ்வரத்தில் தோண்டப்பட்ட குழியில் குவியல் குவியலாக ஏ.கே. 47 துப்பாக்கித் தோட்டாக்கள்!

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் பெட்டிப் பெட்டியாகச் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கச்சிமடம் அருகே சிக்கிய துப்பாக்கி தோட்டாக்கள்

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர் மீனவர் அந்தையா. அவருக்குச் சொந்தமான பண்ணை வீடு அந்தோணியார்புரத்தில் உள்ளது. அந்தையா இறந்துவிட்ட நிலையில் அவரின் மகன் எடிசன் என்பவர் தற்போது இந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை இவரது வீட்டின் அருகில் இருந்த கழிவுநீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்பைச் சரி செய்வதற்காகக் குழி தோண்டியுள்ளனர். அப்போது குழிக்குள் துருப்பிடித்த நிலையில் இரும்புப் பெட்டிகள் தென்பட்டுள்ளன. அவற்றை வெளியே எடுத்து திறந்து பார்த்தபோது, அதில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் இருந்துள்ளன.

இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீஸார் அந்தப் பகுதியைச் சுற்றி மேலும் குழி தோண்டினர். அப்போது ஏ.கே.47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் தலா 250 தோட்டாக்கள் கொண்ட 25 பெரிய இரும்புப் பெட்டிகள் மற்றும் எல்.எம்.ஜி, ஸ்டென்கன் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் அடங்கிய 25-க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. தகவல் அறிந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி காமினி, எஸ்.பி ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோர் போலீஸ் படையினருடன் துப்பாக்கிகள் கிடைத்த பகுதிக்கு விரைந்து வந்தனர். இரவு நேரம் என்பதால் அங்கு விளக்குகள் அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மணல் தோண்டும் வாகனத்தைக் கொண்டு தோண்டி வருகின்றனர்.

துப்பாக்கி தோட்டாக்களை ஆய்வு பார்வையிடும் எஸ்.பி

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டபோது ராமேஸ்வரம் தீவு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கடலோரப் பகுதிகளில் அவர்களது முகாம்கள் இருந்தன. அப்போது தங்களது ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நிலத்தில் புதைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவ்வாறு புதைக்கப்பட்டதில் எடுக்கப்படாமல் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களாக இவை இருக்கக் கூடும் எனப் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த 2007-ம் ஆண்டில் இதேபோல் மண்டபத்தை அடுத்துள்ள பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மண்ணிலிருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


அதிகம் படித்தவை