`நெல்லையில் மணல் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை’ - புதிய போலீஸ் கமிஷனர் தகவல்

நெல்லை மாநகரப் போலீஸ் கமிஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மகேந்திரகுமார் ரத்தோர், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் மணல் கடத்தலைத் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோர்

நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் பதவி கடந்த பல மாதங்களாக நிரப்பப்படாமலேயே இருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி-யே காவல்துறை ஆணையர் பொறுப்பையும் பல மாதங்களாகக் கூடுதலாகக் கவனித்து வந்தார். கமிஷனர் இல்லாததால் நெல்லை மாநகரப் பகுதியில் செயின் பறிப்பு, மணல் கடத்தல், கொலை உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்கள் அதிகமாக நடைபெற்று வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள். 

அதனால் மாநகர ஆணையர் பணியிடத்துக்கு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அதைத் தொடர்ந்து சென்னையில் பணியாற்றி வந்த மகேந்திரகுமார் ரத்தோர், நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு வெளியாகி 15 நாள்களான நிலையில் அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஆணையர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனித்து வந்த டி.ஐ.ஜி கபில்குமார் சாரட்கர் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய கமிஷனராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திரகுமார் ரத்தோர்,``நெல்லையில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும். செயின் பறிப்பு, கொலைச் சம்பவங்களைத் தடுக்கவும் காவல்துறையினர் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். மணல் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகக் காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் இணைந்து ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள். 

தாமிரபரணி ஆற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது தொடர்பாகவும் வருவாய்த் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 27-ம் தேதி நெல்லையப்பர் கோயிலில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்காக ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சிறப்பான வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!