கோவை குடிநீர் விநியோக விவகாரம்; வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை | Coimbatore Corporation complaints in Cyber crime over Water distribution issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:59 (26/06/2018)

கடைசி தொடர்பு:07:59 (26/06/2018)

கோவை குடிநீர் விநியோக விவகாரம்; வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பாக, சமூக வலைதளங்களில் தவறானத் தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்று கோவை காவல்துறை தெரிவித்துள்ளது. 

கோவை மாநகராட்சி

கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன், மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி 26 ஆண்டுகளுக்கு, சுமார் 3 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதையடுத்து, இனி குடிநீர் கட்டணத்தை யார் விதிப்பார்கள்... குடிநீர் கட்டணம் உயருமா? பொது குழாய்களின் நிலை என்ன, காசு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தண்ணீரா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன.

மேலும், குடிநீரை தனியார்மயப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர். அதேபோல, சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இதைத்தொடர்ந்து, "சூயஸ் நிறுவனம், சேதமடைந்துள்ள குடிநீர்க்குழாய்களை மாற்றி அமைக்கவும் அவற்றைப் பராமரிக்கும் பணிகளில்தான் ஈடுபடும். கட்டணம் நிர்ணயிப்பது முதல் மற்ற அனைத்தும் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்" என கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சூயஸ் உடனான ஒப்பந்தம்குறித்து, ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாநரகாட்சிப் பொறியாளர் லட்சுமணன் சார்பில், சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'ஸ்மார்ட் சிட்டி குடிநீர் ஒப்பந்தம் தொடர்பாக கலகத்தை உண்டாக்கும் வகையில் தவறான செய்திகள் பரப்புபவர்கள்மீது உக்கடம் காவல்நிலையில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுதொடர்பாக பத்திரிக்கைகள், வாட்ஸ்அப், பேஸ்புக் தவறாக செய்தி பரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.