`கிராண்ட் வெல்கம்; மரக்கன்று கிஃப்ட்!’ - ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஆச்சர்யப்படுத்திய முன்னாள் மாணவர்கள்

தஞ்சாவூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்களாக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளவர்களை அழைத்து வந்து மாணவர்கள் இருபக்கமும் வரிசையாக நின்று கைதட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்று மரியாதை செய்ததோடு மரக்கன்று கொடுத்தும் கௌரவித்தனர். இதனால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இடையேயான நட்பு கேள்விக்குறியாகும் இந்தக் காலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியரான பகவான் மாணவர்களிடையே எளிமையாக நட்புறவோடு பழகி வருகிறார். பாடம் நடத்தும் முறையிலும் கடிந்துகொள்ளாமல் எளிதாக மாணவர்களுக்கு புரியும் வகையில் நடத்தியதால் எல்லோராலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பகவானுக்குப் பணி மாறுதல் கிடைத்து வேறு பள்ளிக்குச் செல்ல இருந்தபோது மாணவர்கள் ஆசிரியரிடையே நடத்திய பாசப்போராட்டம், தமிழகம் தாண்டியும் வைரலானது. இதேபோல் தஞ்சாவூரிலும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்களாக இருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களை அழைத்து கௌரவித்து நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

தஞ்சாவூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி மிகவும் பழைமை வாய்ந்தது. தமிழகத்தின் முதல் ஆங்கிலப் பள்ளியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் புகழ்பெற்ற இந்தப் பள்ளியில் 1984-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதற்காகப் பள்ளிக்குச் சென்ற முன்னாள் மாணவர்களிடம் நீங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வுபெற்று பல ஊர்களில் உள்ளனர் எனப் பள்ளியில் தெரிவித்திருக் கின்றனர். உடனே அந்த ஆசிரியர்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணைக் கேட்டு வாங்கி அனைவரையும் செல்போனிலும் நேரிலும் தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறியிருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு வயதாகியிருந்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சிக்கு வருவதாகத் தெரிவித்தனர்.

அதன்படி வந்த பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தற்போது பணியில் இருக்கும் தலைமை ஆசிரியர் என அனைவரும் நிகழ்ச்சிக்கு வந்த போது இருநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கூடி வரிசையாக நின்று மகிழ்ச்சியோடு கைதட்டி நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் நெகிழ்ச்சியில் உறைந்து கண் கலங்கிய ஆசிரியர்கள், மாணவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டனர். மேலும், இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஆசிரியர் ஒருவர், ``நான் பாடம் நடத்தும்போது உங்களிடையே கடுமையாக நடந்துகொள்வேன். ஏன் பலரை அடித்தும் இருக்கிறேன். இன்றைக்கு நாங்கள் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர்களாகிய நீங்கள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எனப் பல பேர் பெரிய பொறுப்புகளில் இருப்பதாகச் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட வேறு என்ன எங்களுக்கு வேணும். நாங்கள் அடித்ததை எல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், எங்களைத் தேடிப்பிடித்துக் கௌரவப்படுத்தியிருக்கிறீர்கள்’’ எனக் கண்கலங்கியபடியே நன்றி கூறிப் பேசினார். அப்போது மாணவர்கள் கண்களிலும் கண்கள் கசிந்தன.

அதில் பேசிய மாணவர் ஒருவர், ``ஒரு மாணவனுக்கு, அவன் படிக்கும் பள்ளிகூடம்தான் படிப்போடு சேர்த்து வாழவும் கற்றுத் தருகிறது. பள்ளிகூடம் என்பது ஒவ்வொரு மாணவனின் விலை மதிக்க முடியாத சொத்து. ஒரு பிள்ளையைக்கூட வீட்டில் சமாளிக்க முடியாமல் பெற்றோர்கள் திணறும்போது, நீங்கள் ஆயிரகணக்கான மாணவ, மாணவிகளை உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களால் வழி நடத்தப்பட்டு கல்வி அறிவோடு வளர்க்கப்பட்ட நாங்கள், இன்று நல்ல முறையில் இருக்கிறோம். உங்களுக்கு மரியாதை செய்வதை நாங்கள் எங்கள் வாழ்க்கையின் பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறோம்’’ என உருக்கமாகப் பேசினார்.

அதன் பிறகு, ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு மரக்கன்று கொடுத்து மாணவர்கள் வாழ்த்துப் பெற்றுக்கொண்டனர். அப்போது நாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய இருக்கிறோம் என அவர்கள் சொல்ல, `குடிதண்ணீர் பிரச்னையால் மாணவர்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்; அதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் செய்யுங்கள்’ எனப் பள்ளி தரப்பில் சொல்லப்பட்டது. உடனே நாங்கள் போர்வெல் அமைத்து மாணவர்களின் தாகத்தைப் போக்குகிறோம் எனக் கூறி அதற்கான பணிகளையும் உடனே தொடங்குகிறோம் எனக் கூறினர். அடுத்த கட்டமாகப் பள்ளிக்குத் தேவையானவற்றைப் படிப்படியாகச் செய்து தருகிறோம் என எல்லாம் மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்க கோரஸாகக் கூறினர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!