`விவசாயிகள் கோவணத்துடன் போராடும்போது நமக்கு எதற்கு பொன்னாடைகள்!’ - கமல் பேச்சு

’மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் கொள்கை விளக்கப் பாடலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது, மாலைகள் அணிவிப்பதைத் தவிர்க்க அவர் கோரிக்கை விடுத்தார்.

கமல் கட்சி

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறி, 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னத்தை வெளியிட்ட அவர், கட்சியைப் பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தை நாடினார். தொடர்ந்து அவரது கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் பதிவு செய்து கொண்டது. இதனிடையே, 'விசில்' என்ற செயலியை உருவாக்கி, மக்கள் தங்கள் குறைகளை அதில் பதிவு செய்யலாம் என கமல் தெரிவித்தார். அரசியலில் தனது தீவிரத்தைக் காட்டும் வகையில் அறிக்கைகள், சுற்றுப்பயணங்கள், அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

கமல்

இந்நிலையில், கட்சிகுறித்தும் நிலைபாடுகுறித்தும், மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்க்கும் வகையில் கொள்கை விளக்கப் பாடலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  காமராஜர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தனது கட்சியின் கொள்கை விளக்கப் பாடலை வெளியிட்டுள்ளார். மொத்தம் 6 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்திற்கு `நம்மவர் படை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களைப் பாடலாசிரியர் சினேகன் எழுதி, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், `விவசாயிகள் கோவணத்துடன் போராடும்போது நமக்கு எதற்கு பொன்னாடைகள்?. வரும் காலங்களில் பொன்னாடைகளைத் தவிருங்கள். மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்கும்போது பழைய முறை எதற்கு?. இனி மாலைகள் அணிவிக்க வேண்டாம். வரும் வழியில் சாலைகளில் நிறைய பேனர்கள் பார்த்தேன். நம் சாலைகளில் நாமே குழி தோண்ட வேண்டாம். நான் எப்படி பெரியாரின் ரசிகனோ, அதேபோல காந்தியின் ரசிகனும்கூட. பெரியாரும் காந்தியின் ரசிகர்தான்’’ என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!