அரசியல் பழிவாங்கலுக்காக அமைச்சரால் இட மாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்!

 அமைச்சர் மணிகண்டனின் நடவடிக்கையால் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிவந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் திருவாடானைக்கு மாற்றப்பட்டுள்ளது,மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 அமைச்சர் மணிகண்டனின் நடவடிக்கையால், மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிவந்த எலும்பியல் அறுவைசிகிச்சை மருத்துவர் திருவாடானைக்கு மாற்றப்பட்டுள்ளது, மாவட்ட மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவர் மதிவாணன் மற்றும் மாறுதல் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் எலும்பியல் அறுவைசிகிச்சை உதவி மருத்துவராகப் பணியாற்றிவருபவர் மதிவாணன். இவர், முன்னாள் அமைச்சரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளருமான வ.து.நடராஜனின் மகன். இவரது அண்ணன் வ.து.ந.ஆனந்த் அ.ம.மு.க-வின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்துவருகிறார். தினகரன் அணி உருவானதில் இருந்து அமைச்சர் மணிகண்டனுக்கும், முன்னாள் அமைச்சர் நடராஜன் தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிலவிவருகின்றன. அ.ம.மு.க மாவட்டச் செயலாளரான ஆனந்த்,  அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக தீவிர அரசியல் செய்துவருகிறார்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பணியாற்றிவந்த மருத்துவர் மதிவாணன், அமைச்சர் மணிகண்டனின் தொடர் அறிவுறுத்தலால் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எலும்பியல் தொடர்பான அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான வசதிகள்கொண்ட மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையில் பணியாற்றிவந்த உதவி மருத்துவமனையில் அமைச்சர் மணிகண்டன்அறுவைசிகிச்சை மருத்துவரான மதிவாணன் இத்தகைய வசதிகள் ஏதும் இல்லாத திருவாடானை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பாக, மாவட்ட மருத்துவ இணை இயக்குநரால் வழங்கப்பட்டுள்ள மாறுதல் உத்தரவில் அமைச்சரின் பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாறுதல் செய்யப்பட்ட மருத்துவர் மதிவாணன் கூறுகையில், ''கடந்த டிசம்பர் மாதம், ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியில் சேர்ந்தேன். இங்கு சேர்ந்தது முதல் நோயாளிகளுக்கு ஏராளமான அறுவைசிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளேன். இந்நிலையில்,  அமைச்சர் மணிகண்டனின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அறுவைசிகிச்சைக்கான அடிப்படை வசதிகள் ஏதுமற்ற திருவாடானை மருத்துவமனைக்கு என்னை மாற்றியுள்ளனர்.  நான் அங்கு மாற்றப்பட்டிருப்பதன்மூலம் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், மாவட்ட தலைமை மருத்துவமனையை நாள்தோறும் நம்பி வரும் நோயாளிகளுக்குதான் இது பாதிப்பை ஏற்படுத்தும்'' என்றார்.

கடந்த சில நாள்களுக்கு முன், போலீஸ் எஸ்.ஐ-யை தாக்கிய வழக்கில் கைதாகி சிகிச்சைபெற்றுவந்த ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அக்காட்சிகளைப் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், அமைச்சர் மணிகண்டன் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காகத் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவருகிறார் என்ற குற்றச்சாட்டும் சேர்ந்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!