வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (26/06/2018)

கடைசி தொடர்பு:07:16 (26/06/2018)

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின்... மொராக்கோவுக்கு எண்டு கார்டு! #ESPMAR

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், குரூப் பி பிரிவில் உள்ள ஸ்பெயின், மொராக்கோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கலிங்கார்டு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. 

ஸ்பெயின் - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான த்ரில் மேட்ச் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. குரூப் சுற்றில் மூன்று போட்டிகளின் முடிவில் ஐந்து புள்ளிகளைப் பெற்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது முன்னாள் உலகச் சாம்பியன் ஸ்பெயின். இத்துடன் மொராக்காவின் உலகக் கோப்பை பயணத்துக்கு எண்டு கார்டு விழுந்தது. 

ஸ்பெயின், மொராக்கோ

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், குரூப் பி பிரிவில் உள்ள ஸ்பெயின், மொராக்கோ அணிகளுக்கு இடையிலான  ஆட்டம்  கலிங்கராட் ஸ்டேடியத்தில் நடந்தது. மொராக்கோ ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. தோல்வியடையாமல் இருந்தாலே ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழலில் களமிறங்கியது ஸ்பெயின்.

எல்லோரும் ஸ்பெயின் கோல் அடிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, 14-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது மொராக்கோ. ஹாஃப் லைனில் இனியஸ்டா, ரமோஸ் இருவருக்கும் இடையிலான மிஸ் பாஸை வாங்கிய மொராக்கோ வீரர் கலித் பவுடாய்ப், ஈஸியாக கோல் அடித்தார். மொராக்கோ 1-0 என முன்னிலை பெற, ஸ்பெயின் ரசிகர்கள் திகைத்து நின்றனர்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே இதற்குப் பதிலடி கொடுத்தது ஸ்பெயின். பெனால்டி பாக்ஸின் இடதுபுறம் 6 யார்டு தூரத்தில் மொராக்கோ டிஃபண்டர்களுக்கு தண்ணி காட்டி அட்டகாச பாஸ் கொடுத்தார் 'மெஜிசியன்' இனியஸ்டா. அதை அலட்டாமல் எளிதாகக் கோல் அடித்து, 1-1 ஸ்கோரை சமன்செய்தார் இஸ்கோ. அதேபோல, இனியஸ்டா இன்னொரு பாஸ்  கொடுத்தார். அதை டியாகோ கோஸ்டா சரியான நேரத்தில் மீட் செய்யவில்லை. மொராக்கோவுக்கு கிடைத்த சான்ஸை, ஸ்பெயின் கோல் கீப்பர் டீ கே தடுத்துவிட்டார். இடைவேளையின்போது 1-1 எனச் சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே மொராக்கோவுக்கு ஒரு சான்ஸ் கிடைத்தது. பெனால்டி பாக்ஸ் ஏரியாவில் வைத்து ஸ்பெயின் சென்டர் பேக் ஜெரார்டு பீக்கே கையில் பந்து பட்டதால், செட் பீஸ் கோரி முறையிட்டனர் மொராக்கோ வீரர்கள். ஆனால், ரெஃப்ரி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. 54-வது நிமிடத்தில் அம்ராபாத் அடித்த பந்து பாரில் பட்டுத் திரும்பியதால், மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர் மொராக்கோ வீரர்கள்.

கடைசி 15 நிமிடத்தில் எப்படியும் இன்னொரு கோல் அடித்துவிட வேண்டும் என, சப்ஸ்டிட்யூட் பிளேயர்கள் அஸ்பாஸ், அசென்ஸியாவை களமிறக்கினார் ஸ்பெயின் பயிற்சியாளர். 80-வது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை பாக்ஸில் வைத்து கையால் பந்தைத் தடுத்தார் பீக்கே. இந்தமுறையும் ரெஃப்ரி கவனிக்கவில்லை. ஆனால், அதே நிமிடத்தில் கிடைத்த கார்னர் கிக்கை, கிறிஸ்டியானா ரொனால்டோ ஸ்டைலில் ஹெட்டர் கோல் அடித்தார் மொராக்கோவின் நெஸ்ரி. 2-1 என மொராக்கோ முன்னிலை பெற்றதால், ஸ்பெயின் உச்சகட்ட நெருக்கடியில் இருந்தது.

இஞ்சுரி டைமில் (90+1) ஸ்பெயின் வீரர் புஸ்கட்ஸ் கொடுத்த பாஸை அஸ்பாஸ் பேக் ஹீல் ஃப்ளிக் செய்து கோல் அடித்தார். ஆனால், அசிஸ்ட்ன்ட் ரெஃப்ரி ஆஃப் சைட் என கொடியை உயர்த்தினார். VAR ஆய்வில் அது ஆஃப் சைட் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு, ஸ்பெயின் கோல் அடித்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஸ்பெயின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மொராக்கோ வீரர்கள் ஆத்திரமடைந்து ரெஃப்ரியுடன் வாக்குவாதம் நடத்தினர்.

கடைசியில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ஒரு வழியாக ஸ்பெயின் தப்பிப் பிழைத்து, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மொராக்கோ, ஸ்பெயினுக்கு எதிராக 2 கோல்கள் அடித்த திருப்தியில் உலகக் கோப்பையில் இருந்து விடைபெற்றது. இந்த குரூப்பில் ஸ்பெயின், போர்ச்சுகல் முதலிரண்டு இடங்களைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க