``அவசரநிலை தொடர்பான தகவல்கள் பாடநூல்களில் சேர்க்கப்படும்” - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``அவசரநிலை பிரகடனம் குறித்துப் பாடநூல்களில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்படும்” எனத் தெரிவித்தார். 

பிரகாஷ் ஜவடேகர்

1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். அந்தக் காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க-வினர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (ஜூன் 25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலம் இந்தியாவின் கறுப்பான காலகட்டம். அது ஜனநாயகத்தின் மீதான பெரும் தாக்குதல். நமது பாடநூல்களில் அவசரநிலை குறித்து தகவல்கள் உள்ளது. இதனை மறு ஆய்வு செய்ய வேண்டும். அவசரநிலை காலம் குறித்துக் கூடுதல் தகவல்கள் பாடநூல்களில் சேர்க்கப்பட  வேண்டும். அதைச் செய்வது நம் பணி. புதிய தலைமுறை மாணவர்களுக்கு அவசரநிலை அமலில் இருந்த காலம் குறித்து விழிப்பு உணர்வு அவசியம் இருக்க வேண்டும். 

இன்று அவசரநிலை காலம் அத்தனை பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அது ஒரு போராட்டமான காலகட்டம். பா.ஜ.க நாட்டு நலனுக்குத்தான் முதல் இடம் அளிக்கும். அதன் பின்னர்தான் கட்சிநலன் மற்றும் சுயநலன்கள் எல்லாம். ஆனால், பழைமையான கட்சி என்று சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு சுயநலம்தான் முக்கியம். அதன் அடுத்தபடியாகதான் கட்சி, இறுதியில்தான் நாட்டு நலன். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவ்வப்போது நீதிமன்ற மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்துப் பேசுகிறார். முதலில் அவர் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட அவசரநிலைக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!