`திருடிய பணத்தை தானம் செய்த கொடை வள்ளல்...!' - உ.பியில் கைது

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர், கூரியர் நிறுவனத்தில் திருடிய பணத்தை, பிச்சைக்காரர்களுக்கும் கோயில்களுக்கும் தானமாகக் கொடுத்து, வள்ளலாக அடையாளப்படுத்திக்கொண்டார். இவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 

கூரியர்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் பாய். இவர், மும்பையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறுவனத்தில் இருந்து ரூ.80 லட்சம் பணத்தைத் திருடியவர் தலைமறைவானார். இதுகுறித்து போலீஸாருக்குப் புகார் அளிக்கப்பட்டது. அவரைத் தேடிவந்த போலீஸார், உத்தரப் பிரதேசத்தில் கைது செய்தனர். அவரிடமிருந்து, ரொக்கமாக ரூ.10.68 லட்சம், 118 கிராம் தங்கம் மற்றும் ஐந்து செல்போனைப் பறிமுதல் செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் ஒருவர் கூறுகையில், `கூரியர் கம்பெனியில் பணத்தைத் திருடிய ரமேஷ் போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க பல்வேறு நகரங்களுக்குச் சென்றுள்ளார். கடைசியாக உ.பி-யில் உள்ள விருந்தாவன் நகரில், வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்துத் தங்கியிருக்கிறார். திருடிய பணத்தை வைத்து, சொகுசு வாழ்க்கை நடத்திய அவர், நகரில் உள்ள அனுமன் கோயில் புனரமைப்புக்காக ரூ.50 ஆயிரத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் அங்குள்ள பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்தைத் தர்மமாக வழங்கி, பிச்சைக்காரர்கள் மத்தியில் கொடை வள்ளலாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார். குறுகிய காலத்தில், எப்படி கொடை வள்ளல் ஆக முடியும். யார் இந்த ரமேஷ் என்று உள்ளூர் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில், மும்பை போலீஸார் உ.பி போலீஸாரிடம் ரமேஷ் பற்றின தகவல் கேட்டுள்ளனர். அதன்பிறகே ரமேஷைக் கைது செய்தோம்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!