வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:10:00 (26/06/2018)

`ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.!' - விமானப்படை வீரரை நெகிழவைத்த பிரதமர் மோடி

வரவேற்பு அணிவகுப்பில் மயங்கி விழுந்த விமானப் படை வீரரிடம், உடல் நலம் குறித்து விசாரித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மோடி

செஷல்ஸ் நாட்டு அதிபர் டேனி பவுரே ஆறு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவருக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பர்ய முறைப்படி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நேற்று வழங்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக இணைந்து டேனி பார்ரை வரவேற்றனர். முப்படை வீரர்களின் அணிவகுப்பின்போது விமானப் படை வீரர் ஒருவர், வெயிலின் உஷ்ணத்தைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை, சக வீரர்கள் பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்று முதல் உதவிக் கொடுத்துள்ளனர். அதன்பிறகு மீண்டும் அவர், அணிவகுப்பில் பங்கேற்றார்.

முப்படை வீரர்களின் அணிவகுப்பு முடிந்தபிறகு, குடியரசுத் தலைவர், செஷல்ஸ் நாட்டு அதிபர் ஆகியோர் சென்றுவிட, பிரதமர் மோடி மயங்கி விழுந்த வீரரின் அருகில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். சில நிமிடங்கள் அவரின் அருகில் நின்று, `உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உங்களை கவனித்துக்கொள்ளுங்கள்' என்று கூறிச் சென்றிருக்கிறார்.