வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (26/06/2018)

கடைசி தொடர்பு:11:20 (26/06/2018)

இரவில் 4 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை... அமைச்சரின் உறுதியால் போராட்டம் வாபஸ்

மைச்சர் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வரும் 27-ம் தேதி அறிவித்த வேலை நிறுத்தப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கோயில்

7-வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி பணிக்கொடை வழங்க வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதற்கேற்றார்போல் சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 27-ம் தேதி (நாளை) முதல் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மதியம் அன்னதானம், சிறப்புத் தரிசன கட்டணம் வசூலித்தல், வழிபாடு கட்டணம், முடி காணிக்கை ஆகியவை வசூலிக்கமாட்டோம் எனவும் பழனி ரோப் கார், விஞ்ச் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அறநிலையத்துறை கமிஷனர் ஜெயா ஆகியோர் 10 பேர்கொண்ட திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் நுங்கம்பாக்கம் அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று இரவு சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருக்கோயில் பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை அறிவிக்கப்பட்ட போராட்டம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.