அக்காவுக்குப் பதில் தங்கச்சி மகனைத் தூக்கிச்சென்ற `மப்டி' போலீஸ்! சினிமாபோல் ஸ்ரீரங்கத்தில் நடந்த நிஜ சம்பவம் | Police mistakenly arrested 10 years old kid

வெளியிடப்பட்ட நேரம்: 16:21 (26/06/2018)

கடைசி தொடர்பு:22:49 (26/06/2018)

அக்காவுக்குப் பதில் தங்கச்சி மகனைத் தூக்கிச்சென்ற `மப்டி' போலீஸ்! சினிமாபோல் ஸ்ரீரங்கத்தில் நடந்த நிஜ சம்பவம்

`மப்டி'யில் வந்த தஞ்சை மாவட்ட போலீஸார் சட்டவிரோதமாக  10 வயது குழந்தையைக் காரில் கடத்திய சம்பவம் ஶ்ரீரங்கத்தில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது.

போலீஸ்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் 8 பேரில் ஏற்கெனவே 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் மேலத்தெருவை சேர்ந்த சிவக்குமார் மனைவி தேவி என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போலீஸார் சந்தேகப்படும் தேவி, ஸ்ரீரங்கம் மேலூரில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கவே, அய்யம்பேட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் எஸ்.ஐ சசிகுமார், ஏட்டு மணிகண்டன் மற்றும் பெண் போலீஸ் சசிகலா  உள்ளிட்டவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில் திருச்சி ஶ்ரீரங்கம் மேலூர் பகுதிக்கு `மப்டி' உடையில் வாடகை காரில் வந்தனர்.

அவர்கள் சிவக்குமார் வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது தேவி அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள தேவியின் தங்கையின் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு தேவி தங்கியிருப்பதாக சந்தேகப்பட்டனர். அங்கு யாரும் இல்லாததால், அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த தேவியின் தங்கை மகன் சந்தோஷ் என்கிற 10 வயது சிறுவனைப் பிடித்த போலீஸார், அவர்கள் வந்த  காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர். சட்டென அவர்கள் கார் ஸ்ரீரங்கம் நோக்கிப் பாய்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குழந்தைக் கடத்தல் கும்பல் சந்தோஷை கடத்திச் செல்வதாக நினைத்து அந்தக் காரை மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் துரத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. 

மேலும், அப்பகுதி பொதுமக்கள், ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தகவல் சொல்லி, சிறுவன் சந்தோஷ் கடத்தப்பட்ட தகவலைச் சொன்னதுடன், கார் எண்ணைச் சொல்லி காரை மடக்கிப் பிடிக்கும்படி தகவல் சொன்னார்கள்.  அதனையடுத்து, ஶ்ரீரங்கம் மேலவாசல் ஏரியாவில், சிறுவன் சந்தோஷுடன் வந்த காரைப் பிடித்த பொதுமக்கள், இதுகுறித்து விசாரித்தபோது, தாங்கள் போலீஸார் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது அங்கு திரண்ட மேலூர், தெப்பக்குளம் மற்றும் மேலவாசல் பகுதி மக்களுக்கும் காரில் இருந்த போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த திருச்சி ஸ்ரீரங்கம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலைமையிலான போலீஸார், சிறுவன் சந்தோஷை மீட்டதுடன், அனைவரையும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் ராமச்சந்திரன், அய்யம்பேட்டை போலீஸாரிடம் விசாரணை நடத்தினார். அவர்கள் போலீஸ் என்பதை உறுதி செய்த அவர்,  ``மாவட்டம் விட்டு மாவட்டம், விசாரணைக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படித் தகவல் சொல்லாமல் வந்தது தவறு. அதுமட்டுமல்லாமல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு சம்பந்தமில்லாமல், ஒரு சிறுவனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு வந்ததும் தவறு. அதைப் பார்த்து பொதுமக்கள் சிறுவன் கடத்தப்படுகிறான் என்று நினைத்துப் பதற்றமடைவார்கள் என்பது எதார்த்தமானது. ஆகவே, இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் என தஞ்சை போலீஸாருக்கு அறிவுரை வழங்கி, சிறுவன் சந்தோஷை மீட்டு, தேவியின் தங்கையிடம் ஒப்படைத்தார்.  அதையடுத்து அய்யம்பேட்டை போலீஸாரும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

சீருடையில் இல்லாத போலீஸார், சந்தேகப்படும் குற்றவாளியின்  உறவினரின் 10 வயதுக் குழந்தையை கடத்திய சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க