வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (26/06/2018)

கடைசி தொடர்பு:11:51 (26/06/2018)

`அதெல்லாம் நடக்கவே நடக்காது’, `மெஸ்ஸி Vs ரொனால்டோ....’! - ஜெயக்குமாரின் பளீச் பதில்கள்

மாநிலத்தில் ஆளுநர் ஆய்வு நடத்துவதையும் தூய்மை குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதையும் குற்றம் சொல்லக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.   

ஜெயக்குமார்
 

சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ஆளுநர் ஆய்வு குறித்தும் மு.க.ஸ்டாலின் போராட்டங்கள் குறித்தும் கேள்வியெழுப்பினர்.

 `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இருக்கும்போது ஆளுநர் ஆய்வு எதற்கு? நீங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கமாட்டீர்களா?’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், `இதே கேள்வியை எத்தனைத் தடவை கேட்பீர்கள். இது புளித்துப்போனக் கேள்வி. ஆளுநர் என்பவர் நிர்வாகத்தின் தலைவர். ஆளுநர் அலுவலகம் தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டது. அவர்களாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தமாட்டார்கள். எந்த அதிகாரிகளுக்கும் உத்தரவிடமாட்டார்கள். அவர் தூய்மைப் பணிக்காக, அதாவது நாடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டங்களில் ஆய்வு நடத்துகிறார். அதை எப்படி நீங்கள் மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடுவது என்று கூற முடியும். அவர் எப்போதுமே மாநில அரசின் செயல்பாட்டில் தலையிடமாட்டார்’ என்றார் உறுதியாக. 

இதையடுத்து செய்தியாளர் ஒருவர்,  `தி.மு.க ஆளும் கட்சியாக இருந்து அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஆளுநர் இவ்வாறு ஆய்வு நடத்தினால் நீங்கள் எதிர்க்காமல் இருப்பீர்களா?’ என்று கேள்வியெழுப்பினார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த ஜெயக்குமார்  `தி.மு.க ஆளுங்கட்சியா...? அப்படி ஒரு நிலை வரவே வராது. தி.மு.க ஆட்சிக்கே வராது’ என்றார். 

`கமல் விரைவில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லியிருக்கிறாரே...? என்ற கேள்விக்கு, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை எடுத்துக்காட்டாக ஜெயக்குமார் கூறிய விளக்கம் பின்வருமாறு... ‘உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி. வேறு யாருக்கும் அங்கு இடம் கிடையாது. அப்படிதான் இங்கும்’ என்றார். அதாவது அ.தி.மு.க , தி.மு.க இடையேதான் போட்டி. இங்கு வேறு எந்தக் கட்சிகளுக்கும் இடமில்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க