வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (26/06/2018)

கடைசி தொடர்பு:11:20 (28/06/2018)

ரூ.1.65 கோடி... 25 அறைகள்... பசுமை வழிச்சாலைக்காக இடிக்கப்படும் புதிய பள்ளிக் கட்டடம்

விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே சென்னை டு சேலம் இடையே அமையவிருக்கும் எட்டு வழிச்சாலைக்குத் தேவையான நில எடுப்பு அளவீடு பணி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 13-ம் தேதி அரூர் அடுத்துள்ள வேடகட்டமடுவில் தொடங்கி பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வழியாக மஞ்சவாடி கணவாய் வனப்பகுதி வரை 24-ம் தேதியுடன் முடிவடைந்தது.

பசுமை வழிச்சாலையால் பாதிக்கும் பள்ளி

தர்மபுரி மாவட்டத்தில் 53 கி.மீட்டர் தூரம் பயணிக்கும் பசுமை வழிச்சாலைக்காக 70 மீட்டர் அகலத்துக்கு வனப்பகுதி, விவசாய நிலங்கள், கோயில்கள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சிறுசிறு கிராமங்கள் உள்ளிட்ட நிலப்பகுதிகளை அளவீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பசுமை வழிச்சாலைக்காக அளவீடு பணிகளை முடித்துள்ள மாவட்ட நிர்வாகம், அடுத்தகட்டமாக 53 கி.மீட்டர் தூரம் பசுமை வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்டுள்ள நிலத்துக்கான இழப்பீடு வழங்க விவசாய நிலங்களின் பரப்பளவு அதற்கு அரசாங்கத்தின் மதிப்பீடு தற்போதைய வெளி மார்க்கெட் மதிப்பீடு, நிலத்தில் உள்ள கிணறு மற்றும் போர்வெல், வீடுகள், மரங்களின் மதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அளவீடு பணிகளை முடித்ததுடன் இழப்பீடு வழங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ள மதிப்பீட்டுப் பணிகளுக்கு விவசாயிகள் இடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், 2016-2017-ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி உதவியுடன் பாப்பிரெட்டிபட்டி அடுத்துள்ள லட்சுமாபுரம் பகுதியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிப்புக்காக ரூ.1.65 கோடி செலவில் 25 அறைகள் கொண்ட அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கட்டடம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது, பசுமை வழிச்சாலைக்காக இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது. மலைவாழ் மக்களின் பெரும் முயற்சியில் கொண்டுவரப்பட்ட இந்தப் பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட இருப்பது அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.