வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:25 (26/06/2018)

'பாடத்திட்டத்தில் எமர்ஜென்சி!' - வெங்கைய நாயுடு வலியுறுத்தல்

`இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் இந்தியக் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு. 

வெங்கய்ய நாயுடு எமர்ஜென்சி

இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அதே காலகட்டத்தில் அரசியலில் கால்பதித்தார் இன்றைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. அவசரநிலை காலகட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நாட்டின் அப்போதைய நிலை குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்திரா காந்தியை ஹிட்லருடன் ஒப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்பீட்டுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுவும், `எமர்ஜென்சி பற்றி இன்றைய தலைமுறை இளைஞர்கள் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்' எனக் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், `அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவின் இருண்ட காலமாகும். இதைப் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்க வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் அவசரநிலை என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவசரநிலை எவ்வாறு திணிக்கப்பட்டது, ஏன் திணிக்கப்பட்டது என்பதை மக்களுக்குக் கற்பிக்க வேண்டும்' என்றார்.