வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (26/06/2018)

கடைசி தொடர்பு:16:20 (26/06/2018)

`நல்லது செய்கிறோம் என்ற பெயரில் காலூன்றப்பார்க்கிறது'- ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகக் கொந்தளிக்கும் பொதுமக்கள்

'பொது மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்ற பெயரில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அரியலூரில் காலூன்றப்பார்க்கிறது. இதை, நாங்கள் ஒரு போதும் விடமாட்டோம்' என்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறக்கவிடாமல் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள குருவாலப்பர்கோவில், வீரசோழபுரம், கரைமேடு உள்ளிட்ட 6 கிராமங்களில் ஓஎன்ஜிசி மூலம் மீத்தேன் எரிவாயு எடுக்கத் தயார் நிலையில் உள்ளனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயம் பாதிப்பதோடு விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும் என்பதால், இத்திட்டத்தைக் கிராம மக்கள் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.

ஓஎன்ஜிசி அமைத்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

இந்த நிலையில், பெரியாகுறிச்சி மற்றும் அசாவீரன்குடிக்காடு ஆகிய கிராமங்களில் ஓஎன்ஜிசி-யின் சமுதாய வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் அமைத்துள்ளது. இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவுக்காக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டன.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்க்கும் பொதுமக்கள்

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கே வந்த இளைஞர்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்கக் கூடாது என்றும், குடிநீரை இலவசமாகக் கொடுத்து மீத்தேன் எரிவாயு எடுக்க போர்வெல் அமைக்க முன்னோடி திட்டமாக இது உள்ளதாகக் குற்றம் சாட்டிய இளைஞர்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் திறக்கக் கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழாவைக் கைவிட்டுவிட்டுச் சென்றனர். அதேபோன்று, அசாவீரன்குடிக்காடு கிராமத்திலும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவைக் கைவிட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.