வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:18:00 (26/06/2018)

`பான் ஸ்டார்ஸ்' நட்சத்திரம் ரிச்சர்ட் 'ஓல்டு மேன்' ஹாரிசன் மறைவு

ஹிஸ்டரி சேனல் ரியாலிட்டி தொடரான  'பான் ஸ்டார்ஸ்' (Pawn Stars) நிகழ்ச்சியின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவரான ரிச்சர்ட் ஹாரிசன்  (Richard harrison), பார்கின்சன் நோயால் மறைந்துவிட்டார். நீண்ட  நாள்களாக  பார்கின்சன் நோயுடன் போராடியவர்,  கடந்த திங்கள்கிழமை காலை மறைந்துவிட்டதாக அவரது மகன் ரிக் ஹாரிசன் தெரிவித்தார். ரிக் ஹாரிசன், அந்தத் தொடரில் தந்தையுடன் நடித்திருந்தார். தனது தந்தையின் இறப்பைப் பற்றி  இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப்  பதிவிட்டுள்ளார்.

"அவர், என் ஹீரோவாகவும் ஆசானாகவும் இருந்தார். மிகவும் கூலான  'ஓல்டு மேன்' என்றழைக்கப்பட்ட அவரை நான் அப்பாவாகப் பெற்றது என் அதிர்ஷ்டம். "அவர் ஒரு முழுமையான வாழ்வை வாழ்ந்திருந்தார். ஹிஸ்டரி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'பான் ஸ்டார்ஸ்' ஊடாக மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தொட்டு, குடும்பம், அன்பு, கடின உழைப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றை அவர்களுக்குக் கற்பித்தார்."

ரிச்சர்ட்

Photo Courtesy: Pawn Stars/ Twitter

ரிக் ஹாரிசன், “அனைவரது அனுதாபங்களுக்கும்  பிரார்த்தனைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பான் ஸ்டார்ஸ் 2009-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஹிஸ்டரி தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இது, லாஸ் வேகாஸிலிருக்கும் ரிச்சர்ட் குடும்பத்தின் உலகப் புகழ்பெற்ற 24 மணிநேர தங்கம், சில்வர் அடகு மற்றும் வணிக ரீதியிலான கடைக்குள் அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய நிகழ்ச்சி . "எங்கள் நண்பர் ரிச்சார்ட், 'ஓல்ட் மேன்' ஹாரிசன், ஹிஸ்டரி தொலைக்காட்சி நட்சத்திரம் மற்றும் பான் ஸ்டார்ஸ் குடும்பத்தின் அன்பான உறுப்பினரான அவரின் இழப்பினால், நாங்கள் மிகவும் வருத்தத்துடன் உள்ளோம்" என்று சமூக ஊடகங்களுக்கு ஹிஸ்டரி ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தங்கம் மற்றும் சில்வர் பான் கடையின் உறுப்பினர்கள் மற்றும் பான் ஸ்டார்ஸ் குடும்பத்தினர், அவரது இழப்புக்கு துக்கம் அனுசரித்து வருகின்றனர். ரிச்சர்ட் ஹாரிசனின் மறைவு, பான் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.