‘விஸ்வநாதன் ஆனந்த்துடன் விளையாட ஆசை’ - சென்னை திரும்பிய இளம் கிராண்ட் மாஸ்டர் தடாலடி

சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு, சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர், `விஸ்வநாதன் ஆனந்த்துடன் விளையாட ஆசை` என்று கூறியிருக்கிறார்.

பிரக்ஞானந்தா

இத்தாலியில் நடந்த கிரெடின் ஓப்பன் தொடரில் சிறப்பாக விளையாடிய சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா, உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற தர வரிசையில் 2,482 புள்ளிகள் பெற்றவருடன் மோத வேண்டும் என்ற நிலையில், ஒன்பதாவது சுற்றில் 2514 ரேட்டிங் பெற்றிருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த புரிஜ்செர் ரொய்லாண்ட் என்பவருடன் பிரக்ஞானந்தா மோதினார். அந்தப் போட்டி டிராவில் முடிந்ததால், 13 வயதுக்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இளம் வயது வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.

இந்தச் சாதனையைத் தொடர்ந்து, சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், போட்டியை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு, விமானநிலையத்தில் மேளதாளங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய பிரக்ஞானந்தா, “கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. செஸ் போட்டியில் இன்னும் அதிக புள்ளிகளைப் பெற தொடர்ந்து முயற்சி செய்வேன். என்னுடைய வெற்றிக்கு பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் உதவினர். அனைவருக்கும் நன்றி. நான் மூன்று வயதில் செஸ் விளையாடத் தொடங்கினேன். எனது 5-வது வயதில் போட்டிகளில் கலந்துகொண்டேன். இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ரஷ்ய கிராண்ட்  மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருடன் செஸ் விளையாட ஆவலாக உள்ளேன்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!