'நகராட்சி ஆபீஸில் சாக்கடையைக் கொட்டுவோம்' - போராட்டத்தில் கொதித்த மக்கள்

''சிதம்பரம் நகரின் பாதாள சாக்கடைக் கழிவுகள், பாசிமுத்தான் ஓடை பாசன வாய்க்காலில் கலப்பதைத் தடுக்காவிட்டால், நகராட்சி அலுவலகத்தில் சாக்கடை நீரைக் கொட்டி போராட்டம் நடத்துவோம்'' என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

சிதம்பரம் நகரின் பாதாள சாக்கடைக் கழிவுநீர், நகர எல்லையில் உள்ள லால்புரம் கிராமத்தில் கலக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. இந்த சாக்கடை செல்லும் குழாய், பாசிமுத்தான் ஓடை வழியாகச் செல்கிறது. தற்போது, பாசிமுத்தான் ஓடையில் புதிதாகப் பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், பாதாள சாக்கடை குழாயை உடைத்து பாசிமுத்தான் ஓடை வாய்க்காலில் விட்டுள்ளனர். இதனால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் கடும் இன்னல்களுக்கு  ஆளாகியுள்ளனர்.

இதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேகர்  தலைமையில், இன்று சிதம்பரம் வண்டிகேட்டில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.  அப்போது, அதிகாரிகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை சிதம்பரம் நகர போலீஸார் கைதுசெய்தனர்.   இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கழிவுநீர், பாசன வாய்க்காலில் கலப்பதுகுறித்துக் கூறிய பொதுமக்கள், கடந்த 15 தினங்களாக சாக்கடைக் கழிவுநீர், பாசன வாய்காலில் கலந்து ஓடுவதால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் கடும் துன்பத்துக்கு ஆளாவதாகவும், இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இனியும் அதிகாரிகள் மெத்தனமாக நடந்துகொண்டால், சாக்கடைக் கழிவுநீரை அள்ளி எடுத்துச்சென்று, சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கொட்டி போராட்டம் நடத்துவோம் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!