மதுரையில் எய்ம்ஸ் அமைய யார் காரணம்? வரலாற்றை விளக்கும் சுதர்சன நாச்சியப்பன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கு யார் காரணம் என்று அதிமுக, திமுக, பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் உரிமை கொண்டாடி மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இதற்கு யார் காரணம்? என்பதை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனிடம் பேசினோம்.

சுதர்சன நாச்சியப்பன்

“1956ல் இந்திய பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு, மிகப்பெரிய அளவில் மருத்துவ ஆராய்ச்சி மையம் டெல்லியில் கொண்டுவரப்பட வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சமயத்தில், 'இந்த ஆராய்ச்சி நிலையம் (எய்ம்ஸ்) இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும்' என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அப்போது, நியூஸிலாந்து நாட்டின் ஒப்பந்தத்தின்படி 1 மில்லியன் டாலர், டெல்லியில் எய்ம்ஸ் தொடங்க அன்றைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இன்றைக்கு தோப்பூர்; அன்றைக்கு ஆஸ்டின்பட்டி. இங்கே தொழுநோய், இருதயநோய், நுரையீரல், கணையம் போன்ற நோய்களுக்கான ஆராய்ச்சி மருத்துவமனையாக    1960-ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கியது. அப்போதே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் வேண்டும் என்பதற்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தினார், காமராஜர்.

2012-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ஒரே நேரத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதற்கு பல்வேறு மாநிலங்களில்  20 இடங்களைத் தேர்வுசெய்து அறிவித்தது. அப்படி அறிவித்ததில் மதுரையும் ஒன்று. அதன்பிறகு, பல்வேறு அரசியல் மருத்துவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, மதுரைக்கான எய்ம்ஸ் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதன்பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பி.ஜே.பி வந்தது. அதன் சுகாதாரத்துறை அமைச்சரை நாங்கள் சந்தித்தபோதெல்லாம் மற்ற மாவட்டத்தினர் பிரஷர் கொடுத்தார்கள். ஆனால், மதுரைக்கு எய்ம்ஸ் வந்துவிடும் என உறுதியளித்தார்கள். அதன்படி மதுரைக்கு எய்ம்ஸ் வந்திருக்கிறது. நிதி உதவி வராது. அடுத்த அரசு மத்தியில் அமைந்த பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்வார்கள். தமிழக அரசுக்கு இதில் ஒரு வேலையும் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்யவேண்டியதில்லை. காமராஜர் ஆட்சியில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார். அந்த நிலத்தில்தான் எய்ம்ஸ் அமைய இருக்கிறது. அதனால், இதற்குக் காரணமாக இருந்த காமராஜர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!