'ஒன் நேஷன், ஒன் கல்ச்சர் முழக்கம் ஆபத்தானது'- திருமாவளவன் எச்சரிக்கை | thol.thirumavalavan slams bjp

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:33 (27/06/2018)

'ஒன் நேஷன், ஒன் கல்ச்சர் முழக்கம் ஆபத்தானது'- திருமாவளவன் எச்சரிக்கை

"தலித்துகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற புதிய யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். சங்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், தனித்தனிச் செயல்திட்டங்களோடு களத்திலே இறங்கி செயல்பட்டுவருகிறார்கள்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமாவளவன்

சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் முப்பெரும் விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர், "இஸ்லாமிய சமூகமும் ஒடுக்கப்பட்ட சமூகமும் அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை கால்நூற்றாண்டுக்கும் மேலாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருகிறது. கொள்கை அடிப்படையிலேயே இவர்கள் இணைய வேண்டும். இந்நிகழ்ச்சியில், 'அறம்' திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கோடிட்டுக் காட்டியதைப் போல, இந்தியாவில் இரண்டே சமூகங்களுக்குத்தான் பிரச்னை, ஒடுக்குமுறை,  எதிர்ப்பு அரசியல் நிலவுகிறது. ஒன்று இஸ்லாமிய சமூகம், இன்னொன்று தலித் சமூகம். இந்த இரண்டு சமுதாயமும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் இணைந்துவிடக் கூடாது என்று நம் கொள்கைப் பகைவர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் நாம் இணைந்து நிற்பது, காலத்தின் தேவையாகிறது. அப்படிப்பட்ட கொள்கைப் பிடிப்போடு இன்று களத்தில் நாம் கைகோத்து நிற்கிற நிலையில், நம்முடைய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஒரு நெடுந்தூரப் பயணத்துக்கு அடித்தளம் அமைக்கிற வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சி வழங்கியிருக்கிற இந்த அம்பேத்கர் விருது அமைந்திருக்கிறது.

இந்திய மண்ணில் இந்த இரண்டு சமூகங்களுக்குத்தான் சிக்கல் இருக்கிறது என்றால், கிறிஸ்தவர்களுக்கு இல்லையா, விளிம்பு நிலை சமூகங்களுக்கு இல்லையா... பெண்களுக்கு இல்லையா... இதர உழைக்கும் வர்க்கத்தினருக்கு இல்லையா? என்கிற கேள்வி எழும். எல்லாம் இந்த இரண்டு சமூகங்களுக்குள் அடங்கிவிடுகிறது. இந்திய அரசியலே இந்த இரண்டு சமூகங்களுக்கும் எதிராக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒன்று, சாதிய வாதமாகவும், இன்னொன்று மதவாதமாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்திய மண்ணில் இஸ்லாமிய எதிர்ப்பு என்பதுதான், இந்துக்களை ஒருங்கிணைப்பதற்கு அந்த வாக்கு வங்கியைத் திரட்டுவதற்குப் பயன்படும் என்று மதவாதிகள், மதவாத சக்திகள் மிகச்சிறந்த யுக்தியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கையாண்டு, அதில் வெற்றியும்பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமிய வெறுப்புதான் பாபர் மசூதியை இடித்தது. பாபர் மசூதி இடிப்புதான் பி.ஜே.பி-யை ஆட்சியில் போய் அமர வைத்தது. இது ஒரு நிரூபிக்கப்பட்ட அரசியல் யுக்தி. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதன்மூலம், பரப்புவதன்மூலம் அதைத் தொடர்ந்து மக்களிடையே நிலைநிறுத்துவதன்மூலம் அரசியல் ஆதாயம் பெற முடியும் என்பதை பாரதிய ஜனதாவின் வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது.

திருமாவளவன்

பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால் பாரதிய ஜனதா, இடிப்புக்குப் பின்னால் பாரதிய ஜனதா என்று அரசியலை நாம் பிரித்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. பாரதிய ஜனதாவின் அரசியல் வளர்ச்சி, பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர்தான் உச்சத்தைத் தொட்டது. அதுவரையில் பாரதிய ஜனதாவால் காங்கிரஸ் கட்சியைப் பெரிய அளவில் அசைத்துப்பார்க்க முடியவில்லை. ஒரு எதிர்க்கட்சி என்கிற அளவில்தான் அவர்களால் வெற்றிபெற முடியும் என்கிற நிலை இருந்தது. எந்த நிலையிலும் அவர்களால் ஆளும்கட்சியாக வரமுடியாது என்கிற சூழல் இருந்தது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு படிப்படியாக வளர்ந்து வலுபெற்று, பாபர் மசூதி இடிப்பு என்கிற நிலைக்குக் கொண்டுபோய், அதை இடித்துத் தகர்த்ததன் விளைவாக, மிகப்பெரிய ஒரு வீச்சை பாரதிய ஜனதா பெற்றது. அதன்பிறகு, இந்தியா முழுவதும் ஒரு வெற்றியைப் பெற்றது. ஆகவே, மதவாத சக்திகளுக்கு, வகுப்பு வாத வெறியர்களுக்கு, குறிப்பாக இந்துத்துவ சக்திகளுக்கு, இஸ்லாமிய சமூகத்துக்கு எதிரான எதிர்ப்பை தொடர்ச்சியாக ஒரு ஆயுதமாகவே கையில் வைத்திருக்க வேண்டும் என்கிற ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கிறது; உறுதியைத் தந்திருக்கிறது. அது, வெறுப்பு அரசியலின் ஒரு முகம்.

இன்னொரு முகம், தலித்துகளுக்கு எதிரான எதிர்ப்பு. சாதியவாதிகளை மேலும் மேலும் ஒருங்கிணைப்பதற்குப் பகுதி வாரியாக அவர்களை ஒன்றுகூட்டுவதற்கு தலித் வெறுப்பு என்பது அவர்களுக்கு மிக இலகுவான, ஏதுவான யுக்தியாக இருக்கிறது. ஆகவே, தலித் எதிர்ப்பை ஒரு அரசியல் உத்தியாக எடுத்தால், அதிலும் வெற்றிபெற முடியும் என்பதற்கு தமிழ்நாட்டிலே தருமபுரி வன்முறை ஒரு சான்று. தருமபுரி தொகுதியிலே ஒரு கட்சி வெற்றிபெற்றதே அதற்கான சான்று.  அது, ஏனோதானோ என்று நடந்த வன்முறை அல்ல. தூத்துக்குடி சம்பவம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக நடந்த வன்முறை அல்ல. அது திட்டமிட்ட  அரச பயங்கரவாத ஒடுக்குமுறை. அதேபோலத்தான் தலித் வெறுப்பு என்பது திட்டமிட்டு பரப்பப்பட்டது. அதற்கு எதிராக எல்லா சமூகத்தையும் ஒருங்கிணைக்க முடிந்தது. அரசியலிலும் வெற்றிபெற முடிந்தது. ஆகவே, இந்தச் சமூகத்தில் சாதியவாத முகமாக தலித் வெறுப்பு அரசியலும், மதவாத முகமாக இஸ்லாமிய வெறுப்பு அரசியலும் இங்கே அரசியல் உத்தியாகக் கையாளப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொண்டால்தான், ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் ஒன்றுபடவேண்டிய தேவையை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.


இங்கே, ஒவ்வொருவரும் ஒரு தேசியம் பேசுகிறோம். பாரதிய ஜனதா பேசுகிற தேசியம் மதவழி தேசியம். நாம் பேசுகிற தமிழ் தேசியம் என்பது மொழிவழி தேசியம். பாரதிய ஜனதா ஒரு மொழியின் ஆக்கிரமிப்பின்மூலம் மதவழி தேசியத்தைக் கட்டமைக்க முயல்கிறது. அதுதான் இந்து தேசியம். இந்து தேசியம் என்பது வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையிலான தேசியமாக, இந்து மதம் சார்ந்த தேசியமாக மட்டுமே நாம் பார்த்துவிடக் கூடாது. அவர்கள், இந்து ராஷ்டிர தேசியத்தைப் பேசுகிறார்கள். இந்தியா என்கிற எல்லைக்குள் நிற்கவில்லை. இந்தியாவைத் தாண்டிய அகண்ட பாரதம் என்கிற இந்து ராஷ்டிரத்தைப் பேசுகிறார்கள். இந்த தேசத்தின் பெயரையே இந்து ராஷ்டிரமாக மாற்ற வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதை இந்துக்களின் தேசம் என்று அறிவிப்பதுதான் அவர்களின் தொலைதூரத் திட்டம். அதற்காக எதையும் செய்வார்கள் என்கிற நிலைக்கு அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். மிக இலகுவான ஒரு முழக்கத்தை முன் வைத்திருக்கிறார்கள். நாம் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறோம். அந்த முழக்கம், 'ஒன் நேஷன், ஒன் கல்ச்சர்' என்பது. இது ஆபத்தானது, தீங்கானது. பன்மைத்துவம் நிகழ்கிற இந்த தேசத்தில், பல  மொழி பேசும் மக்கள், பல மதம் சார்ந்த மக்கள். அதனடிப்படையில் பல்வேறு கலாசாரங்களை நீண்ட நெடிய காலமாகப் பின்பற்றி வாழ்கிற தேசத்தில், ஒன் கல்ச்சர் என்பது எப்படி இருக்க முடியும்? உருவாக முடியும்? ஒன் நேஷன் என்பது சரி, ஒன் கல்ச்சர் என்பது எப்படி உருவாக முடியும். ஆகவே, அவர்கள் நோக்கத்தில் ஒன் கல்ச்சர் என்றால் ஒன் ரிலீஜியன் என்று பொருள். ஒன் கல்ச்சர் என்றால் ஒன் லாங்குவேஜ் என்று பொருள். அந்த அடிப்படையிலேதான் அவர்கள் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார்கள். காய்களை நகர்த்துகிறார்கள்.

இந்த மண்ணில் மதமாற்றம் நிகழக் கூடாது. கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் மாறுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும்.  பெரும்பான்மையாக தலித்துகள் மாறுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும். எனவே, தலித்துகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற புதிய யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தனித்தனிச் செயல்திட்டங்களோடு களத்திலே இறங்கிச் செயல்பட்டுவருகிறார்கள். அதிலே, அவர்கள் படிப்படியாக வெற்றியும் பெற்றுவருகிறார்கள் என்பதற்கான சான்றுதான், அமைச்சரவையிலே ராம்விலாஸ் பாஸ்வானும், ராம்தாஸ் அதுவாலேவும் இடம்பெற்றிருப்பது. தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகியிருக்கிறார். இதையெல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், அவர்கள் தலித்துகளை அரவணைக்கும் யுக்தியைக் கையாண்டுவருகிறார்கள். அவர்கள் எம்பவர் ஆக வேண்டும் என்பதற்காக அல்ல, எம்பவர் மென்ட் ஆஃப் தலித்ஸ் என்பதற்காக அல்ல, தலித்துகள் மதமாற்றத்தை முன்னெடுத்துச்செல்கிறார்கள். அதை மெள்ள மெள்ளத் தடுக்க வேண்டும். தலித் சமூகத்தினரிடையே ஊடுருவ வேண்டும். அவர்களை இன்றைக்கு தம்வயப்படுத்த வேண்டும் என்ற முயற்சி. அதன் அடிப்படையில்தான் தருமபுரியிலே சாதிவெறியாட்டம் தலைவிரித்தாடியபோது, அதைப்பற்றி வாய் திறக்காத சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள், பெரியகுளம் பக்கத்திலே, தேனி அருகே துளுக்கர்பட்டி என்கிற பொம்மி நாயக்கன்பட்டியிலே இஸ்லாமிய மக்களுக்கும், தலித் மக்களுக்கும் இடையில் நடந்த ஒரு பிரச்னையில் உடனடியாகப் போய் தலையிட்டு, தலித் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று குரல்கொடுக்கிறார்கள். இதெல்லாம் எதைக் காட்டுகிறது, தலித்துகளை அரவணைக்கிறோம் என்கிற பெயரில், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், சிறுத்தைகளுக்கு எதிராகவும் இன்னொரு யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். நாம் மிகக் கவனமாக உணர்ந்து கொள்ளவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். மிகக் கவனமாகக் கையாளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close