வைத்தியநாதபுரம் திரௌபதி அம்மன் கோயிலில் ஆனித்தேரோட்டம்!

வைத்தியநாதபுரம், திரெளபதி அம்மன் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திரெளபதியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வைத்தியநாதபுரத்தில் திரெளபதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆனித்திருவிழாவை முன்னிட்டு 48 நாள்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அன்றைய தினம் கோயில் வளாகத்தில் பாரதம் பாடுதல் மற்றும் பக்தர்கள் தீ மிதித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர். பிறகு, எட்டு மண்டகப்படி முறையில் சாமி ஊர்வலம் நடந்தது. 48வது நாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

 திரெளபதியம்மன் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள்

இந்தக் கோயிலில் குழந்தை வரம் வேண்டியும் திருமண தோஷம் நீங்க வேண்டியும் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த வேண்டுதல் பக்தர்களுக்குத் தேரோட்டத்தன்று கோயிலில் அம்மனுக்குப் படையல் போடப்பட்ட சாதத்தில் இருந்து ஓர் உருண்டை பிரசாதமாக வழங்கப்படும். இதைப் பெண்கள் உண்ணும் நிலையில் குழந்தை வரம் மற்றும் திருமண தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இதன்படி இன்று ஏராளமான பெண்களுக்கு உருண்டை சாதம் வழங்கப்பட்டது. இதில் வெளியூர்களிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தையொட்டி காளி, அரவான் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர்வலத்தில் வந்த வேடதாரிகள் பக்தர்களின் தலையில் முறத்தால் அடித்தனர். இதன் மூலம் அவர்களுக்குள்ள நோய்கள் தீரும் என்பதும், பேய், பிசாசுகள் விரட்டப்படும் என்பதும் நம்பிக்கையாகும். இதனால் ஏராளமான பக்தர்கள் வேடதாரிகளிடம் இருந்து முறத்தால் அடிவாங்கினர். இத்தேரோட்டத்தை முன்னிட்டு வைத்தியநாதபுரத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!