வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:21:06 (26/06/2018)

‘இனி வங்கிகளில் கடன் வழங்கக் கூடாது’ - ரிசர்வ் வங்கிக்கு எதிராகக் களமிறங்கிய தேனா வங்கி

`பொதுத்துறை வங்கிகளில் கடன் வழங்கக் கூடாது' என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை எதிர்த்து அனைத்து வங்கிகளும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்' எனத் தேனா வங்கி அழைப்பு விடுத்துள்ளது. 

தேனா வங்கி

இந்தியாவில் 1969 ஜூலை 19-ம் தேதி 14 பெரிய வங்கிகள் பொதுத்துறையாக அறிவிக்கப்பட்டபோது, தேனா வங்கியும் அதனுள் இணைந்தது. இத்தனை ஆண்டுக்காலம் சிறப்பாகச் செயல்பட்டு வந்த தேனா வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு, அதன் ஊழியர்களைக் கொதிக்கவைத்துள்ளது. `கடந்த மே மாதம் முதல் தேனா வங்கி உட்பட 11 பொதுத்துறை வங்கிகள் கடன் அளிக்கக் கூடாது' என உத்தரவுதான் கொதிப்புக்குக் காரணம். கூடவே, 'யாரையும் புதிதாக வேலைக்கு நியமிக்கக் கூடாது' என்ற உத்தரவும் போராட்டத்துக்குத் தொடக்கப்புள்ளி வைத்துள்ளது. ``கடன் வழங்குவதுதான் ஒரு வங்கியின் உயிர் மூச்சு. ஒரு வங்கியின் கடனை நிறுத்துவதன்மூலம் அந்த வங்கி எப்படி முன்னேற முடியும் என்பதுதான் எங்களின் கேள்வி. மேலும், இந்தச் செயல்பாடு ஒரு வங்கியின் லாபத்தை வெகுவாகப் பாதித்து வங்கியை மோசமான நிலைக்குக் கொண்டுசெல்லும். எனவே, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள கடன் வழங்கக் கூடாது என்ற முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்" எனக் கொதிப்புடன் பேசத் தொடங்கினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். 

 சி.பி கிருஷ்னண்அவரிடம் தொடர்ந்து பேசினோம். "2014 முதல் 2018 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் 5,89,359 கோடி ரூபாய் நிகரலாபம் பெற்றுள்ளன. ஆனால், பெரு முதலாளிக்ளுக்கு ஒதுக்கப்பட்ட கடன் மற்றும் வாராக் கடன் ஆகியவற்றில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் 77,642 பெரு நிறுவனங்களிடமிருந்து 83.4 சதவிகித ரூபாய் வாராக் கடனாக உள்ளது. இதற்கு முழு முதல் காரணம் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும்தான். தேனா வங்கியை பொறுத்தவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3,486.67 கோடி லாபம் பெற்றுள்ளது. அதே சமயம், பெரு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்த கடனுக்காக 3,722.10 கோடி ரூபாய் நஷ்டமும் அடைந்துள்ளது. வாராக் கடனை வசூல் செய்ய மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மறுக்கிறது. இதற்கு அவர்களே முழுமையான காரணம். மேலும், மத்திய அரசின் பிரதிநிதிகளே அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் முதன்மை அதிகாரிகளாக உள்ளனர். அதேபோல கடன் கொள்கை என்பதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். சிறு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும்போது 100 சதவிகிதம் அல்லது அதைத் தாண்டியும் சொத்து அடமானம் கேட்கப்படுகிறது. 

ஆனால், பெரு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கும்போது 25 முதல் 30 சதவிகிதம் மட்டுமே சொத்து அடமானம் கேட்கிறார்கள். சில சமயங்களில் அதுவும் கேட்க மறந்து கோடிக்கணக்கில் கடன் அளிக்கிறார்கள். மேலும், கடன் கொள்கை திவால் என்ற மசோதாவின்மூலம் பெரு நிறுவனங்களிடம் எளிதாகக் கடன் வசூலிக்க முடியும் என ரிசர்வ் வங்கி கூறிவருகிறது. ஆனால், உண்மை நிலை என்பது, ஒரு தனியார் வங்கி வாங்கிய 12,000 கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. பெரு நிறுவனங்களிலிருந்து கடன் வசூல் ஆகாமல் இருந்தால், அதைக் கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் வேறு நிறுவனம் வைத்திருந்து, அதன்மூலம் கடன் பெற முயன்றால், அந்தக் கடன் மறுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகளே வாராக்கடனுக்கு முழுமையான பொறுபேற்க வேண்டும். இதற்கு, அனைத்து பொறுப்புகளையும் ரிசர்வ் வங்கியே ஏற்க வேண்டும். தற்போது அனைத்து வங்கிகளிலும் பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். 2017-ம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களின் எண்ணிக்கை 13,985 ஆக இருந்தது. இது 2020-ம் ஆண்டு வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது சரியானது கிடையாது. இவற்றையெல்லாம் எதிர்த்துதான் தேனா வங்கி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது" என்றார்.