வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (26/06/2018)

கடைசி தொடர்பு:19:25 (26/06/2018)

மதுவுக்கு எதிராகப் போராடிய விளையாட்டு வீரரை நிர்வாணமாக்கிய போலீஸார்!

மதுக்கடைகளை மூடச்சொல்லி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர் ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர் காவல் துறையினர்.

மதுவுக்கு எதிராகப் போராடிய விளையாட்டு வீரரை நிர்வாணமாக்கிய போலீஸார்!

``மதுக்கடைகளை மூடச்சொல்லி தமிழகத்தில் பல ஆண்டுகளாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் எவ்வளவு வீரியமான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றாலும், அதைத் தமிழக அரசும், காவல் துறையும் கலைத்துவிடுகிறது. குறிப்பாக, மதுவுக்கு எதிராகப் போராடுபவர்களைத் தாக்குவதும், அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவதுமே இன்றைய அரசாங்கத்தின் வேலையாக இருக்கிறது'' என்கின்றனர், மதுவுக்கு எதிராகக் களமிறங்கும் போராளிகள். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி மதுக்கடைகளை மூடச்சொல்லி கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு வீரர் ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர் காவல் துறையினர். அதுமட்டுமல்லாது, விசாரணை என்கிற பெயரில் அவரைக் கேவலமான வார்த்தைகளால் திட்டியும், அவருடைய ஆடைகளைக் கலைந்து நிர்வாணப்படுத்தியுமிருக்கின்றனர் காவல் துறையினர். 

மதுக்கடைகள் எதிர்ப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ். வாள் சண்டை வீரரான இவர், தேசிய அளவில் 10 விருதுகளை வாங்கியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு செல்போன் டவர் மீது ஏறி மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தபோது காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். அதன்பிறகு, தொடர்ச்சியாக மதுக்கடைகளை மூடச்சொல்லிப் போராட்டம் நடத்திவருகிறார். இதனால், இவர்மீது இதுதொடர்பாகப் பல வழக்குகள் உள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று மதுக்கடைகளுக்கு எதிராக 201 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இவர், அவர்களின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு தமிழகம் அனுப்பிவைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி தனியொரு நபராகச் சென்று கன்னியாகுமரி கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். அன்றைய தினம் அங்குள்ள காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட டேவிட், பின்னர் விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், அந்தப் பகுதி ஆண்கள் மற்றும் பெண்களை ஒன்றிணைத்து சுமார் 70-க்கும் மேற்பட்டோருடன் கடந்த 25-ஆம் தேதி அதே கலெக்டர் அலுவலகம் முன் மதுக்கடைகளை மூடச்சொல்லி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இத்தகவல் அறிந்த நேசமணி நகர் காவல் துறையினர் போராட்ட இடத்துக்கு வந்து அனைவரையும் விரட்டியடித்தனர். இந்தப் போராட்டத்தை ஒன்றிணைத்த டேவிட் ராஜைக் கைது செய்து, கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும், அவருடைய ஆடைகளைக் கலைந்து அரை நிர்வாணப்படுத்தியுள்ளனர். 

இதுகுறித்து டேவிட் ராஜ் நம்மிடம் பேசியபோது, ``கடந்த 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த 3,000 மதுபானக் கடைகளை மூடியது தமிழக அரசு. அதன்பின், 700 கடைகளைத் திறந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் வகை மாற்றம் செய்யப்பட்ட சாலை விவரங்கள் பற்றிய விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால், மாநகராட்சி மற்றும் நகராட்சிச் சாலைகளை வகைமாற்றம் செய்து கடந்த மே மாதம் 21-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில், `வகைமாற்றம் செய்யப்பட்ட சாலைகளில்  புதிதாக 800 கடைகளைத் திறந்துகொள்ளலாம்' எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து, அதை செய்து முடிக்க தமிழக அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. பல ஊர்களில் புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. ஒருபக்கம் மாணவர்கள் குறைந்து காணும் அரசுப் பள்ளிக்கூடங்களை மூடியும், மறுபக்கம், மதுப்பானக் கடைகளை அசுர வேகத்தில் திறப்பதும் தமிழக அரசின் இமாலய சாதனையாக இருக்கிறது. இதுகுறித்து காரணம் கேட்டால், `மாணவர்கள் குறைவாக இருக்கும் பள்ளிகள்தான் மூடப்படுகின்றன' என்கிறது அரசு. மாணவர்கள் குறைவாக வருகிறார்கள் என்றால் யார் காரணம்? தரமான கல்வியும், நல்ல வசதிகளையும் மாணவர்களுக்குச் செய்துகொடுத்தால் எப்படி மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வராமல் இருப்பார்கள்? அனைவரும் குடிக்க வர வேண்டும் என்பதற்காக மதுப்பானக் கடைகளைச் சொகுசாக மாற்றத் தெரிந்த தமிழக அரசுக்கு, மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டும் என்பதில் எண்ணம் இல்லை. 

மதுக்கடைகள் எதிர்ப்பு போராட்டம்

அதனால்தான் மதுக்கடைகளை மூடவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் கடந்த 25-ஆம் தேதி எங்கள் பகுதியில் உள்ள மக்களை ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் கண்களை கட்டிக்கொண்டு போராட்டம் செய்தோம். ஆனால், காவல் துறை எங்களை விரட்டியடித்தது. போராட வந்த பெண்களை இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி மிகவும் கேவலமாகப் பேசினார். என்னைக் கைதுசெய்து விசாரணை என்ற பெயரில் ஆடைகளைக் கலைத்து சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக அரை நிர்வாணத்தில் உட்காரவைத்து இன்ஸ்பெக்டர் திட்டினார். பழைய போராட்டங்களையும் சேர்த்து வழக்குப் பதிந்தார்கள். பின்னர் நிபந்தனையின் பெயரில் கோர்ட்டில் என்னை வெளியேவிட்டார்கள். என்மீது வழக்குப் போட்டதுகூடப் பிரச்னையல்ல... ஆனால், மதுவை ஒழிக்க வேண்டும் என்ற போராடியதற்காக மூன்று மணி நேரத்துக்கு மேல் அரை நிர்வாணத்தில் விசாரணை நடத்தியது எந்த விதத்தில் நியாயம்" என்று கேள்வியெழுப்புகிறார் டேவிட் ராஜ்.

போராட்டத்தைத் தடை செய்வதுதானே போலீஸின் கடமையாக இருக்கிறது!


டிரெண்டிங் @ விகடன்