டெல்லி மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாபா ராம்தேவுக்கு மெழுகுச் சிலை! | Baba Ramdev to donate robe, shoes for wax figure at Madame Tussauds

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (26/06/2018)

கடைசி தொடர்பு:21:00 (26/06/2018)

டெல்லி மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாபா ராம்தேவுக்கு மெழுகுச் சிலை!

புகழ்பெற்ற மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகுச்சிலை அமைக்கப்பட இருக்கிறது. 

பாபா ராம்தேவ்

Photo Credit: Twitter/yogrishiramdev

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அருங்காட்சியகம் அமைத்துள்ள மேடம் டூஸாட்ஸ், அங்கு பல்வேறு துறை பிரபலங்களின் முழு உருவத்தை மெழுகுச்சிலையாக அமைத்துள்ளனர். பிரபலங்கள் மெழுகுச்சிலைமூலம் ஃபேமஸான அந்த அருங்காட்சியகத்தில், பிரதமர் மோடி, தோனி, விராட் கோலி ஆகியோருக்கு ஏற்கெனவே மெழுகுச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில், மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகம் சமீபத்தில் திறக்கப்பட்டது. 

இந்த அருங்காட்சியகத்தில், யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகுச்சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக, அவரின் முகம் மற்றும் உயர அளவுகளை மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியக ஊழியர்கள் சமீபத்தில் எடுத்திருக்கின்றனர். 200 அளவை மற்றும் பல்வேறு கோணங்களிலும் அவரை புகைப்படம் எடுத்துள்ளனர். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, ஒற்றைக் காலில் நிற்பது போன்ற விருக்‌ஷாசன நிலையில் அவருக்கு மெழுகுச்சிலை அமைக்கப்பட இருக்கிறது.  

இந்த புகைப்படங்களை அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரின் பதிவில், `உலகிலேயே முதன்முறையாக யோகா குரு ஒருவருக்கு மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை அமைக்கப்பட இருக்கிறது. யோகாவை அடிப்படையாகக்கொண்ட வாழ்வியலை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்’’என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த சிலைக்குத் தனது மேலங்கி மற்றும் ஷூவை அவர் அளித்துள்ளார்.