டிக்கெட் விவகாரத்தில் இரண்டரை வயது குழந்தையை நடத்துநரிடம் விட்டுச் சென்ற தந்தையால் பரபரப்பு!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவியது ஒரு தகவல்.  பேரளம் காவல் நிலையத்தில் பேருந்து நடத்துநரால் ஒப்படைக்கப்பட்ட இக்குழந்தையைப்  பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லலாம்  என்பதுதான் அந்தச்  செய்தி.  குழந்தை புகைப்படத்துடன் வெளியான அச்செய்தி ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது.  தீவிரமாய் விசாரித்தோம்.  

குழந்தை

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தத்தில் இதயதுல்லா என்பவர் திருவாரூர் செல்லும் பேருந்தில் குழந்தையுடன் ஏறியிருக்கிறார். 4 மைல் தூரம் கடந்து எலந்தங்குடி என்ற ஊர் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, குழந்தைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துநர்  கூறியிருக்கிறார். அதைக் கேட்ட இதயதுல்லா, ``என் குழந்தைக்கு இரண்டரை வயதுதான் ஆகிறது.  மூன்று வயதுக்கு மேல்தானே அரை டிக்கெட் எடுக்க வேண்டும்?"  என்று நியாயம் கேட்டிருக்கிறார்.  அதற்கு நடத்துநரோ, ``இல்லை உன் குழந்தைக்கு 3 வயது ஆகியிருக்கும், நீ டிக்கெட் எடுத்துத்தான்  ஆகவேண்டும்  என்று கூறியிருக்கிறார்.  ``பிள்ளையைப் பெத்த எனக்கு வயசு தெரியுமா, இல்ல உனக்கு வயசு தெரியுமா? என் பிள்ளைக்குப் பிறப்புச் சான்று இருக்கு, ஆதார் அட்டை இருக்கு.  இதையெல்லாம் ஆதாரத்தோடு கொண்டுவந்து உன்கிட்ட காட்டுறேன்.  அதுவரைக்கும் குழந்தைக்கு நீதான் பொறுப்பு என்று கோபத்துடன் கூறிவிட்டு, எலந்தங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இதயதுல்லா வேகமாகச் சென்றுவிட்டார்.  குழந்தையை வைத்துக்கொண்டு தவியாய் தவித்த நடத்துநர் என்ன செய்வதென்று தெரியாமல் அடுத்ததாகத் திருவாரூர் மாவட்ட எல்லையில் உள்ள பேரளம் காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தார். 

உண்மையான தந்தையாக இருந்தால் குழந்தையை விட்டுச்செல்வாரா? இவர் குழந்தை கடத்தல் பேர்வழியாக இருப்பாரோ  என்ற சந்தேகத்தை காவல் நிலையத்தில் தெரிவித்திருக்கிறார்.  இதற்கிடையே வீட்டுக்குச் சென்ற இதயதுல்லா குழந்தையின் பிறப்புச் சான்று, ஆதார் அட்டை இரண்டையும் எடுத்துக்கொண்டு திருவாரூர் நோக்கி வரும்போது, பேரளம் காவல் நிலையத்தில் கூட்டமாக இருக்கவே, காவல் நிலையத்துக்குள் செல்ல குழந்தை, கத்திக்கொண்டு ஓடிவந்து கட்டிக்கொள்கிறது. 

அதன்பின் நடந்தவற்றை பேரளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா கூறுகிறார், ``இதயதுல்லா கொண்டு வந்த ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழின்படி குழந்தையின் வயது இரண்டரைதான். இந்தச் சின்ன விஷயத்துக்காகக் குழந்தையை தவிக்கவிட்டுச் செல்லலாமா என்று அன்புடன் கண்டித்து, சமாதானப்படுத்தி குழந்தையை அவருடன் சேர்த்து அனுப்பினோம்" என்றார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள குழந்தையின் தந்தை இயதுல்லா, 'என் குழந்தையின் வயதை தவறாய் கூறி டிக்கெட் கேட்ட நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .  

குழந்தை பெற்றோருடன் சென்றுவிட்டது.  ஆனால் வாட்ஸ்அப்பில் இந்தமேட்டர் எத்தனை ஆண்டுகள் வலம் வருமோ தெரியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!