`என் அக்காவைக் காதலிக்க உனக்கென்ன தகுதியிருக்கு?’ - அக்காவின் காதலனைக் கொலை செய்த மாணவன்!

காதல் விவகாரத்தில் கொலைச் செய்யப்பட்ட விஜய்

காதல் விவகாரத்தில் அக்காவின் காதலனை நண்பர்களுடன் சேர்ந்து ப்ளஸ் 1 மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அடுத்துள்ளது கணவனூர். இந்த ஊரைச் சேர்ந்த நடராஜன் மகன் விஜய் என்பவர், சமீபத்தில் பாலிடெக்னிக் படிப்பை முடித்துவிட்டு திருச்சி ஜங்ஷன் பகுதியில் ரயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்தார்.

இந்நிலையில், நேற்று மாலை திருச்சி மாவட்டம் பழூர் செல்லும் சாலையில், மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்துக் காயங்களுடன் விஜய் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று உயிருக்குப் போராடிய விஜயை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர். ஆனால், விஜய் உடலில் இருந்து அதிக அளவிலான ரத்தம் வெளியேறிய காரணத்தால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாகப் பலியானார்.

அதையடுத்து, ஜீயபுரம் போலீஸ் டி.எஸ்.பி சிவசுப்பிரமணியம் மற்றும் எஸ்.ஐ ராமராஜன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், 'திருச்சியில் படிக்கும் ப்ளஸ் டூ மாணவி அழகேஸ்வரிக்கும்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. அழகேஸ்வரியை விஜய், தினமும் அழைத்துச் சென்று வந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விஜய்-அழகேஸ்வரி காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் பழூரைச் சேர்ந்த விஜய்யின் நண்பர் அவரது பிறந்தநாள் விழாவிற்காக, விஜய்யை அழைத்ததாகவும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பைக்கில் சென்றபோது பழூர் சாலையில் 3 பேர் அவரை வழிமறித்துக் கத்தியால் குத்தியது தெரியவந்தது. தொடர் விசாரணையில், விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வா, கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய்யை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தெரிவித்த போலீஸார், 'சம்பவம் நடந்த அன்று, நண்பர் பிறந்த நாள் விழா கலந்துகொள்ளச் சென்ற விஜய், நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதுடன், காதலியையும் பார்த்துவிட்டு வரலாம் எனச் சென்றதாக கூறப்பட்டது. அந்தவகையில் விழாவில் கலந்துகொண்ட விஜய், மாலை பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகிலுள்ள ஒரு தோப்பில் விஜய் காதலியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.

அங்கு மது போதையில் இருந்த விஷ்வா, விஜய்யை தோட்டத்திற்குள் அழைத்துச் சென்று பிரச்னை செய்துள்ளனர். அப்போது திடீரென விஜய்யை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய்யின் உடலை கணவனூர் பொதுமக்கள், பழூர் மாணவியின் வீட்டுக்குச் தூக்கிச் சென்றனர். அதனைப் பார்த்து பதறிய போலீசார் சமாதானம் செய்து அடக்கம் செய்ய வைத்தனர்.

காதல் விவகாரத்தில் +1 மாணவன் ஒருவர் தனது அக்காவைக் காதலித்தவரை கூட்டுச் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!