வளர்மதி மீண்டும் கைது செய்யப்பட்டதற்குக் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் கண்டனம்!

வளர்மதி மீண்டும்

இயற்கை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வளர்மதி, சிறையில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டதைக் குடியுரிமை பாதுகாப்பு நடுவம் கண்டித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு எதிராகப் போராடியதால் கடந்த 19-ம் தேதி வளர்மதி கைது செய்யப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் வளர்மதியின் பிணை மனுவினை சேலம் நீதித்துறை நடுவர் கடந்த 22-ம் தேதி தள்ளுபடி செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24-ம் தேதி, சென்னை வடபழனியில் "அச்சமில்லை அச்சமில்லை" என்ற பட வெளியீட்டு விழாவில்  பேசியதற்காக  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அந்த நிகழ்ச்சி நடந்து 3 மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் 20-ம் தேதி வடபழனி காவல்நிலைய குற்ற எண்.240/2018-ன் கீழ் 153, 505(1)( b) இ.த.ச வின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இவ்வழக்கு பதியப்பட்டு 2 மாதம் கழித்து, கடந்த 8 நாள்களாகச் சிறையிலிருக்கும்  வளர்மதி, 27-ம் தேதி வடபழனி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 28-ம் தேதி  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். மக்களுக்காகப்  போராடுவோர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்யும் அரசைக் கண்டிக்கிறோம். வளர்மதி உட்பட அனைவரையும் அரசு  விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!