வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (27/06/2018)

கடைசி தொடர்பு:07:30 (27/06/2018)

அர்ஜென்டினா ரசிகர்களே... நீங்கள் குரோஷியாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும்! #worldcup

2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை குரோஷியா வீழ்த்தியதால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் போட்டியில் இருந்து ஐஸ்லாந்து விலக நேர்ந்தது. ஒருவேளை இப்போட்டியில் ஐஸ்லாந்து வெற்றி பெற்றிருந்தால், அர்ஜென்டினா தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

ரஷ்யாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின், 'டி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் குரோஷியா அணியும் ஐஸ்லாந்து அணியும் மோதின. ரஸ்தோவ் அரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி, குரோஷியா வெற்றி பெற்றது.

குரோஷியா தான் ஆடிய இரண்டு போட்டிகளில், அர்ஜென்டினா மற்றும் நைஜீரியாவை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் 'டி' பிரிவில் முதலிடத்தில் இருந்தது. 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட போதும், ஐஸ்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியையும் வென்றுவிட வேண்டும் என்ற முடிவோடு களமிறங்கியது அந்த அணி.

உலகக்கோப்பை குரோஷியா - ஐஸ்லாந்து

ஒன்றில் தோல்வி, ஒன்றில் 'டிரா' கண்டிருந்த ஐஸ்லாந்து, இப்போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.

முதல்பாதியில் டிஃபண்டர்களைத் தாண்டி கோல் அடிக்க இரு அணிகளுமே போராடின. 45-வது நிமிடத்தில் கோல் கம்பத்தை நோக்கி ஐஸ்லாந்து அணி வீரர் அடித்த பந்தை அற்புதமாக சேவ் செய்தார் குரோஷியாவின் கோல் கீப்பர் கலினிக். கோல் ஏதுவுமின்றி முதல் பாதி முடிவுக்கு வந்தது.

இரண்டாம் பாதியிலும் ஆட்டத்தில் அனல் பறந்தது. 53-வது நிமிடத்தில் லூகா மோட்ரிச் அடித்த பந்தை, 'ஹாஃப் வாலி' கோல் அடித்து அசத்தினார் மிலன் பாதெல். 1-0 என்ற கோல் கணக்கில் குரோஷியா முன்னிலை பெற்றது.

பெனால்டி கோல் அடிக்கும் ஐஸ்லாந்து அணியின் சிகர்சன்

குரோஷியா டிஃபண்டரின் தவறால் ஐஸ்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு தரப்பட்டது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஐஸ்லாந்தின் சிகர்சன் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 1998 உலகக்கோப்பைக்குப் பிறகு, இந்த உலகக்கோப்பைத் தொடரில் தான் பெனால்டி வாய்ப்பில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு உலகக்கோப்பைத் தொடர்களிலும் பெனால்டி வாய்ப்பில் 17 கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன.

1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் 'டிரா'வை நோக்கி நகர ஆரம்பித்தது. இந்நிலையில், ஆட்டநேர இறுதியில் இவான் பெரிசிக் மேலும் ஒரு கோல் அடித்து குரோஷியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அர்ஜென்டினா உள்ளே... ஐஸ்லாந்து வெளியே..!

ஆட்டநேர இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி, 9 புள்ளிகளுடன் 'டி' பிரிவுக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குரோஷியா. மூன்று லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஐஸ்லாந்து, தான் கலந்துகொண்ட முதல் உலகக்கோப்பைத் தொடரில் லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இதே பிரிவில் நைஜீரியாவுக்கு எதிரான 'வாழ்வா? சாவா?' போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுவிட்டது. இந்த வெற்றியின் மூலம், 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்கும் அர்ஜென்டினா தகுதி பெற்றுவிட்டது. இதற்கு குரோஷியா அணியின் பங்களிப்பும் ஒரு முக்கியக் காரணம். 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை குரோஷியா வீழ்த்தியதால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் போட்டியில் இருந்து ஐஸ்லாந்து விலக நேர்ந்தது. ஒருவேளை இப்போட்டியில் ஐஸ்லாந்து வெற்றி பெற்றிருந்தால், அர்ஜென்டினா தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க