வெளியிடப்பட்ட நேரம்: 08:09 (27/06/2018)

கடைசி தொடர்பு:08:09 (27/06/2018)

`ழ’ சொல்லிப் பழகு தமிழா! - கவிஞர் நீலகண்டன்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் ‘தமிழர் கலை விழா’ நடக்கவுள்ளது. ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள், நடிகர், நடிகையர்கள் என 5,000 பேர் பங்கேற்க உள்ளனர்.

`ழ’ சொல்லிப் பழகு தமிழா!  - கவிஞர் நீலகண்டன்

மெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஃபெட்னாவின் `தமிழர் கலைவிழா’ நடக்கவுள்ளது. ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஜூலை 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்கள், பேச்சாளர்கள், கலைஞர்கள், நடிகர், நடிகையர்கள் என 5,000 பேர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்துகிறது.

இந்த விழாவுக்காக, `பேரவை 2018’ எனும் பெயரில் சிறப்பு ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ஆல்பம், விழாவின் தொடக்க நாளில் வெளியிடப்படவுள்ளது. ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் நான்கு பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் நீலகண்டன். மத்திய அரசு ஊழியரான அவரிடம் பேசினேன்...

ழ - ஓவியம்

``தஞ்சாவூர் மாவட்டம் நாடியம்தான் என்னுடைய சொந்த ஊர். பசுமைக்குப் பஞ்சம் இல்லாத ஊர் என்பதால், கவிதை எழுத எனக்கு ஆர்வம் வந்ததில் ஆச்சர்யமில்லை. நெடுவாசல்தான் என்னுடைய பூர்வீகம். அது சம்பந்தமாக நிறைய கவிதைகளை எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுவது, வாசிப்பது மட்டும் குறிக்கோளாக வைத்திருக்கிறேன்.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா 

அப்படித்தான், ஃபெட்னா (Federation of Tamil Sangams of North America) நடத்தும் தமிழ் விழா ஆல்பத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. மரபு, மழலை, மகளிர் எனப் பல பிரிவுகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை ஆல்பத்தை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா இசையமைத்துள்ளார். 

`ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை' உறுதிசெய்யப்பட்டுவிட்டது. அதைக் கொண்டாடும் வகையிலும் இருக்கைக்கு நிதியுதவி செய்தவர்களை கெளரவிக்கும் வகையிலும் ஃபெட்னாவின் தமிழர் கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் திரையிடுவதற்காக ஐந்து பாடல்களை உருவாக்கியுள்ளனர். அதில் நான்கு பாடல்களை நான் எழுதியுள்ளேன். அதில், `ழ சொல்லடா தமிழா...’ என்ற பாடல் மட்டும் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை, ஃபெட்னாவின் இணையப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். 

தமிழின் அடையாளமாக இருப்பது `ழ’. தமிழகத்துக்குள் நுழைபவர்களை `ழ’ சொல்லச் சொல்லி, பிறகே அனுமதிக்க வேண்டும். இப்படியோர் ஆசை எனக்கு உண்டு. அதை மனதில் வைத்தே, இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதினேன். மேலும், `வீணையின் திருமகளாக...’, `தமிழே... தமிழே... தமிழ் எங்கள் மூச்சு...’, `உலகம் ஒன்றுதான் உயிர் ஒன்றுதான்...’ உள்ளிட்ட பாடல்களையும் எழுதியிருக்கிறேன். 

கவிஞர் நீலகண்டன்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் `ழ சொல்லடா தமிழா...’ பாடலை, தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு, ஆதரவு தெரிவித்துவருகின்றனர். தமிழில் பல கவிஞர்களும் பாடலாசிரியர்களும் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில், பாடல் எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார். 

`பேரவை 2018’ ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில், `மழலை’ குறித்த பாடலை பேராசிரியர் ஹாஜா கனி எழுதியுள்ளார். ஃபெட்னாவின் தமிழர் கலைவிழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழிசை ஆய்வாளர் என்.மம்மது, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓவியர்கள் டிராட்ஸ்கி மருது, இளையராஜா, எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், சு.வெங்கடேசன், கவிஞர் அறிவுமதி, நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி, பாடகர் அந்தோணிதாசன் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்