சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்தினருக்கு 4 ஆண்டுகள் சிறை..!

சொத்துக்குவிப்பு வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்தினருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா புளிச்சம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (67). தி.மு.க கட்சிக்காரரான இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை வானூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவாகப் பதவி வகித்தார். இவர் பதவியில் இருந்த அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது. அதுகுறித்து அப்போதைய கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் மாரிமுத்துவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி, சுமார் 131 ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது 16 லட்சத்து 88 ஆயிரத்து 951 ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.

முன்னாள் திமுக எம்.எல்.ஏ

மேலும் அந்த சொத்துகள் மாரிமுத்துவின் மனைவி துளசியம்மாள்(60), மகன் பிரகாஷ்(35) ஆகியோர் மீதும் இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேர் மீதும் கடந்த மார்ச் 31-ம் தேதியன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சார்பதிவாளர், வருவாய்த்துறை அதிகாரி என மொத்தம் 60 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று மதியம் நீதிபதி பிரியா தீர்ப்பு வழங்கினார். அதில் முன்னாள் எம்.எல்.ஏ மாரிமுத்து அவரின் மனைவி துளசியம்மாள், மகன் பிரகாஷ் ஆகிய மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகையைக் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவில் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏறத்தாழ 14 வருடங்கள் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் மூவருக்கும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!