வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (27/06/2018)

கடைசி தொடர்பு:10:20 (27/06/2018)

பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம்..! சர்சைகளுக்கு வித்திடுமா?

பல பரபரப்புகளுக்கு இடையே இன்று மதியம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை, ஆவணங்கள் மறைக்கப்பட்டது உட்பட பல பிரச்னைகளை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எழுப்புவதாக பேசப்படுகிறது. இதனால் ஆட்சிக்குழு கூட்டத்தில் சர்ச்சைகள் எழவும் வாய்ப்புகள் உள்ளன.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களிடம் விசாரித்தபோது, ``பெரியார் பல்கலைகழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் சென்ற மார்ச் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பதிவாளர் அங்கமுத்து மரணம், ஆவணங்கள் மறைக்கப்பட்ட விஷயம், நீதிமன்ற வழக்கில் உள்ளவர்களை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமித்தது, மூத்த பேராசிரியர்கள் இருக்கும்போது இளைய பேராசிரியர்களை ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமித்தது, தேர்வுத் தாள் திருத்தும் மையத்தைத் தனியார் சுயநிதிக் கல்லூரியில் ஒப்படைத்தது, துணைவேந்தரே இல்லாதபோது யூனிக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது போன்ற பிரச்னைகளைச் சென்ற ஆட்சிக்குழுவிலேயே பேசப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அது பற்றி வாய் திறக்காமல் வெற்றுக் கூட்டமாகவே நிறைவுபெற்றது. இதனால் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில், இன்று மதியம் 2:30 மணிக்கு மீண்டும் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் சில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மேலே குறிப்பிட்டப் பிரச்னைகள் பற்றி ஆட்சிக் குழுவில் எழுப்புவதாக தெரிவித்திருக்கிறார்கள். இதனால் ஆட்சிக்குழு கூட்டத்தில் சர்ச்சைகள் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது'' என்றார்கள்.