வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (27/06/2018)

கடைசி தொடர்பு:12:11 (27/06/2018)

சடலத்தை 2 நாள்களாக காரிலேயே வைத்து சுற்றிய கொலையாளிகள் - ப.சிதம்பரத்தின் உறவினர் கொலையில் பரபர பின்னணி

சிவமூர்த்தி

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் உறவினர் சிவமூர்த்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை மருமகன். திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் இவர், கடந்த 25-ம் தேதி காலை வழக்கம்போல அலுவலகத்துக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டிலிருந்து தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்.

பின்னர் மதியத்துக்கு மேல் அவரது செல்போன் நெட்வொர்க்கும் ஆப் செய்யப்பட்டிருக்கிறது. அவர் எங்கு சென்றார் என்ற விவரமும் யாருக்கும் தெரியாத நிலையில், மாலையில் அவரின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் அதுதொடர்பாக திருப்பூர் மாநகர காவல்துறையும் விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அந்தக் காரில் வந்த கவுதமன், விமல் மற்றும் மணிபாரதி ஆகிய 3 பேர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்திருக்கிறார்கள். 

சந்தேகமடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தியதில், அவர்கள் தொழிலதிபர் சிவமூர்த்தியை கொலை செய்த விவரம் தெரிய வந்திருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வைத்து சிவமூர்த்தியைக் கொலை செய்துவிட்டு, அவரது உடலை காரிலேயே வைத்துக்கொண்டு 2 நாள்களாக சுற்றித்திருந்திருக்கிறது அந்த குழு. பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவமூர்த்தியின் உடலை தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து கிளம்பியவர்கள் இன்று ஆம்பூர் அருகே வாகன சோதனையில் காவல்துறையிடம் சிக்கிக்கொண்டார்கள். கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றும், யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது என்ற ரீதியிலும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது காவல்துறை.