எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு..! 3-வது நீதிபதியை பரிந்துரைத்த உச்ச நீதிமன்றம்

தகுதி நீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சந்திரநாராயணாவை நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். சபாநாயகரின் உத்தரவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்பு அளித்தனர். அதனையடுத்து, அந்த வழக்கு, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி விமலா மூன்றாவது நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். நீதிபதி விமலா மீது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் தங்க தமிழ்ச்செல்வனைத் தவிர்த்த மற்ற 17 எம்.எல்.ஏ-க்களும், இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூன்றாவது நீதிபதியாக விமலாவுக்குப் பதிலாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம். மேலும், நீதிபதி விமலா மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளைத் திருப்பப் பெற வேண்டும். எந்த ஒரு நீதிபதி மீதும் இதுபோன்று குற்றம் சுமத்துவது சரியாக இருக்காது. நீதிபதி மீது குற்றம் சுமத்தி இதுபோன்ற மனுவை இனி தாக்கல் செய்யக் கூடாது. இந்தத் தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விரைந்து முடிக்கவும்  உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!