வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/06/2018)

கடைசி தொடர்பு:13:00 (27/06/2018)

குரல் மாதிரி பரிசோதனை..! சென்னைக்குப் புறப்பட்ட நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி, குரல் மாதிரி பரிசோதனைக்காக பலத்த பாதுகாப்புடன் மதுரை சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

கல்லூரி மாணவிகளைத் தவறானப் பாதையில் வழிநடத்த முயற்சி செய்த வழக்கில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 17-ம் தேதி  கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இவரின் குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி தரப்பில்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

மனு விசாரணைக்கு வந்தபோது நிர்மலாதேவியை 3 நாள்கள் சென்னைக்கு அழைத்துச் செல்ல  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது. நிர்மலாதேவியை 27-ம் தேதியன்று காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து அழைத்து சென்று 28-ம் தேதி சென்னையில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் குரல் மாதிரி பரிசோதனை செய்தபின்னர், 29-ம் தேதி மதுரை மத்திய சிறைச்சாலைக்கு பாதுகாப்புடன் அழைத்து வர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்தது.

இந்நிலையில், நிர்மலாதேவியை மதுரை சிறைச்சாலையிலிருந்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் இன்று அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, சென்னைக்குச் செல்லும் நிர்மலாதேவியிடம் நாளை குரல் மாதிரி பரிசோதனை நடைபெறவுள்ளது. சென்னையில் புழல் சிறையில் உள்ள சிறை எண் 3-ல் 27, 28 ஆகிய 2 நாள்கள் சிறையில் அடைக்கப்படுவார். இதைத் தொடர்ந்து 29-ம் தேதி சென்னையிலிருந்து மதுரை சிறைச்சாலைக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் அழைத்துவரப்படுகிறார். நிர்மலாதேவி பேசிய ஆடியோவை ஒப்பிட்டு அவருடைய குரல் தொடர்பான பரிசோதனை நடைபெறவுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க